தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. புதுவை மாநிலத்திலும் இந்த மழை நீடித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனை அடுத்து இரவு நேரத்தில் கனமழை பெய்ய வானிலை சாதகமாக இருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 11 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தற்போது வரை நீடித்து வருகிறது. தற்போது பெய்த கனமழையால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இந்த மழை விழுப்புரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளான அரசூர், இருவேல் பட்டு, திருவெண்ணைநல்லூர், ஏனாதிமங்கலம், கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம், வடக்குறிச்சி, பாக்கம், அரகண்டநல்லூர், காணை, பெரும்பாக்கம், அய்யூர் அகரம், வீடூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த வண்ணம் உள்ளது.
மேலும், புதுவை மாநிலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட 19 மீனவ கிராம மீனவர்கள் கடல் சீற்றத்தின் காரணமாக கடலுக்கு செல்லவில்லை. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் அதீத மழை பெய்ததால் முக்கிய சாலைகள், விழுப்புரம், திண்டிவனம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் புகும் அபாய நிலை உள்ளது. மேலும் மரக்காணத்தில் 3500 ஏக்கர் பரப்பளவில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான உப்பு உற்பத்தி மழையின் காரணமாக முடங்கியுள்ளது.