பிறந்தநாள் அன்று, மக்கள் பொதுவாக கேக் வெட்டி, தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியே செல்வார்கள். ஆனால், பிரதமர் மோடியோ, தாயை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதிலிருந்து திட்டத்தை தொடங்கி வைப்பது என படு பிஸியாக இருப்பார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 17 அன்று, பிரதமர் மோடி தனது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார்.


இந்த ஆண்டு, பிரதமர் மோடி தனது பிறந்தநாள் அன்று, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குணா தேசிய பூங்காவில் விடுவிக்கிறார். நாட்டில் 1950களில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


மறுபுறம், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 2 வரை நாடு முழுவதும் “சேவா பக்வாடா” திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.


செப்டம்பர் 17, 1950 அன்று வடக்கு குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான வட்நகரில் பிறந்த மோடிக்கு, இந்த வாரம் 71 வயது நிறைவடைந்து 72ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 2014இல் அவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து தனது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடுகிறார் என்பதை கீழே பார்க்கலாம்.


2014


பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்று, காந்திநகரில் உள்ள தனது தாயாரிடம் ஆசி பெற்றார். அதுமட்டுமின்றி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அகமதாபாத்தில் வரவேற்ற பிரதமர், அவருக்கு சபர்மதி ஆசிரமம் மற்றும் சபர்மதி நதிக்கரையை சுற்றி காண்பித்தார்.


2015


பிரதமர் மோடி தனது 65வது பிறந்தநாளில், டெல்லியில் 1965 இந்திய - பாகிஸ்தான் போரின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட ஆறு நாள் ராணுவக் கண்காட்சியான ‘சௌரியாஞ்சலி’க்குச் சென்றார்.


2016


பிரதமர் மோடி தனது 66வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் சென்று காந்திநகரில் உள்ள தனது தாயாரிடம் ஆசி பெற்றார். பின்னர், நவ்சாரிக்கு சென்ற அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


2017


பிரதமர் மோடி தனது 67வது பிறந்தநாளை முன்னிட்டு காந்திநகரில் உள்ள தனது தாயாரிடம் ஆசி பெற்று அன்றைய தினத்தை தொடங்கினார். பின்னர், கேவாடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


2018


பிரதமர் மோடி தனது 68வது பிறந்தநாளை தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் கொண்டாடினார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சோலார் விளக்கு, ஸ்டேஷனரி, பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். தனது 68வது பிறந்தநாளை மாணவர்களுடன் கழித்த பிரதமர், காசி விஸ்வநாதர் கோயிலில் பிரார்த்தனை செய்தார். அங்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


2019


69வது பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை மற்றும் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் பேசினார்.


2020


கொரோனா தொற்றுடன் நாடு போராடி வந்த நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் மந்தமாகவே இருந்தது. கடந்த ஆண்டைப் போலவே, பிரதமர் மோடியின் பிறந்தநாளை ‘சேவா திவாஸ்’ ஆகக் கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் சமூக சேவையை மையமாக வைத்து பாஜக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.


2021


2021 ஆம் ஆண்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநிலத் தலைவர்கள் கவுன்சிலின் 21வது கூட்டத்திலும், ஆப்கானிஸ்தான் தொடர்பான SCO-CSTO அவுட்ரீச் அமர்வில் இணையம் மூலமாகவும் பிரதமர் பங்கேற்றார்.