டைல்ஸ் ஒட்டிய சம்பளத்தை கொடுக்காததால் வீட்டு ஓனரின் பென்ஸ் காருக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்
நொய்டாவைச் சேர்ண்டவர் ரன்வீர். இவர் கொத்தனாராகவும் டைல்ஸ் ஒட்டும் வேலையையும் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சில நாட்களுக்கு முன்பு வேலை செய்துள்ளார். ஆனால் அவருக்கான சம்பளத்தில் வீட்டு ஓனருக்கும், ரன்வீருக்கும் இடையே பிரச்னை வந்துள்ளது. அதில் ரன்வீருக்கு சம்பள பாக்கியை வீட்டு ஓனர் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது . இதனால் ஆத்திரம் அடைந்த ரன்வீர் ஓனரை பழிவாங்க நினைத்துள்ளார். ஓனரிடம் விலை உயர்ந்த பென்ஸ் கார் இருப்பது தெரிந்து அதற்கு குறி வைத்துள்ளார் ரன்வீர். பைக்கில் பெட்ரோல் கேனுடன் வந்த ரன்வீட் ஓனர் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த பென்ஸ் காரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் நேரில் பார்த்து கார் ஓனரிடம் தெரிவித்துள்ளார். கார் முன்பகுதி எரிந்த நிலையில் தீ அணைக்கப்பட்டது. பின்னர் தீ வைத்தது யார் என அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவியில் சோதனை செய்ததில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்த ரன்வீர்தான் இந்த சம்பவத்தை செய்ததை ஓனர் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து ரன்வீர் மீது காவல்நிலையத்தில் புகாரையும் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ரன்வீரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சம்பள பாக்கி காரணமாகவே இப்படி செய்ததாக ரன்வீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள் பலரும் ரன்வீருக்கு ஆதரவாகவே பதிவிட்டுள்ளனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஒருவர் கூலி தொழிலாளியின் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு தொழிலாளியின் கோபம் அப்படித்தான் வெளிப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் ஏழைகளின் நிலைமை இதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் தன்னுடைய கோபத்தை தொழிலாளி வெளிப்படுத்தினாலும் இது குற்றம்தான். சம்பளம் கொடுக்காத ஓனர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.