மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள தெருக்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் போர்க்களமாக மாறியது. ஊழல் விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்குவங்க தலைமை செயலகத்திற்கு பேரணியாக சென்ற பாஜக தொண்டர்கள், காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.






பேரணியாக சென்ற பாஜக ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கல்வீச்சு மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக ஆதரவாளர்களை கலைக்க போலீசார் தடியடியில் இறங்கினர். மேலும், தண்ணீரை பீச்சு அடித்து இறுதியாக, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர்.


கலவரத்தில் போலீஸ் வாகனம் எரிக்கப்பட்டது. இதில், கொல்கத்தா மாநகராட்சியின் பாஜக கவுன்சிலர், பாஜக ஆதரவாளர்கள் மற்றும் போலீஸ் அலுவலர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். அங்கிருந்த போலீஸ் பூத் ஒன்றும் பாஜக ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. இருப்பினும், பிசிஆர் வேனுக்கு காவல்துறையினரால் தீ வைக்கப்பட்டதாகவும், ஆனால், தனது கட்சி ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம் சாட்டினார். மூத்த காவல்துறை அலுவலர்கள் அவருக்கு மறுப்பு தெரிவித்தனர்.


காவல் உதவி ஆணையர் ஒருவரும் வன்முறைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக மேற்கு வங்கத்தில் அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. ஜூலை மாதம், அப்போதைய மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா சாட்டர்ஜியிடம் இருந்து தங்கம், சொத்து ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் தவிர கிட்டத்தட்ட ரூ.50 கோடி ரொக்கத்தை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது.


E-Nuggets எனப்படும் மொபைல் கேமிங் செயலி தொடர்பாக ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் பகுதியில் தொழிலதிபர் அமீர் கானிடம் இருந்து ரூ.17 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவு இந்த பிரச்னையை எழுப்பியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தலைமை செயலகத்தை நோக்கி பாஜக பேரணி நடத்தியது.