பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 15-16 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தானுக்குச் சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். அங்கு, கடந்த 20 ஆண்டு கால அமைப்பின் செயல்பாடுகளை உலக தலைவர்கள் மதிப்பாய்வு செய்ய உள்ளனர்.






பலதரப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் வாய்ப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த உச்சிமாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பார்வையாளர் நாடுகள், அமைப்பின் பொதுச் செயலாளர், அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் (ஆர்ஏடிஎஸ்) நிர்வாக இயக்குநர், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 15-16 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தலைவர்கள் கவுன்சிலின் 22வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சமர்கண்ட் செல்கிறார் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உச்சிமாநாட்டில், ​​தலைவர்கள் கடந்த இருபது ஆண்டு கால அமைப்பின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வார்கள் என்றும் எதிர்காலத்தில் பலதரப்பு ஒத்துழைப்பின் நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய, உலகளாவிய, முக்கியத்துவம் வாய்ந்த தலையாய பிரச்சினைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






உச்சிமாநாட்டிற்கு மத்தியில் சில தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஷி ஜின்பிங் ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களா என்பதை இரு நாடு இன்னும் உறுதி செய்யவில்லை.


கடந்த 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பிரிக்ஸ் மாநாட்டில் கடைசியாக இரு நாட்டு தலைவர்களும் பேசினர். அதற்கு பிறகு, இரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை வெடித்ததிலிருந்து தற்போது வரை, இரு நாட்டு தலைவர்களும் பேசவே இல்லை. இந்நிலையில், சமர்கண்டில் இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்களா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.