PM Modi On Rahul Gandhi: மக்களவையில் ராகுல் காந்தியை போன்று நடந்துகொள்ளாதீர்கள் என, பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். 


பிரதமர் மோடி அறிவுரை:


மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி இன்று முதல் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். குடியரசு தலைவர் முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அப்போது, “மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடந்துகொண்டது போல் நடந்து கொள்ள வேண்டாம் என அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களுக்கும் பிரதமர் அறிவுறுத்தினார். மேலும், ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, எந்தப் பிரதமரும் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறாததால், சிலர் அமைதியின்மைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டியுள்ளார்.


அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர் சந்திப்பு:


பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நாடாளுமன்ற விவகார அமைச்சரான கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”பிரதமர் இன்று எங்களுக்கு ஒரு முக்கியமான மந்திரத்தைக் கொடுத்துள்ளார்.  ஒவ்வொரு எம்.பி.யும் தேசத்திற்குச் சேவை செய்வதற்காகவே சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  கட்சி வேறுபாடின்றி தேசத்திற்கு சேவை செய்வது நமது முதல் பொறுப்பு.


ஒவ்வொரு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.யும் நாட்டுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும். எம்.பி.க்களின் நடத்தை குறித்தும் பிரதமர் எங்களுக்கு நன்றாக வழிகாட்டினார். மேலும் ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதி விவகாரங்களை விதிகளின்படி சபையில் சிறப்பாக முன்வைக்க வேண்டும். ஆர்வமுள்ள பிற முக்கிய விஷயங்களில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என பிரதமர் மோடி கூறியதாக அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்.


கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்கும் பிரதமர் மோடி:


குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் முடிவாக இன்று மாலை தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார். 


கடந்த காலங்களில் பிரதமர் சில சமயங்களில் NDA எம்.பி.க்களிடம் உரையாற்றியிருந்தாலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ​பொதுவாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மட்டுமே பேசுவார். ஆனால், அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்தது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவிலேயே தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.