Haryana Crime: திருட்டில் ஈடுபட்டதை கண்டதால் சிறுமியை கொலை செய்த மாணவனை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமி படுகொலை..!
ஹரியானாவில் 9 வயது சிறுமி சொந்த வீட்டிலேயே எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 10ம் வகுப்பு மாணவன் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்தது என்ன?
குருகிராம் நகரில் செக்டார் 107 பகுதியில் அருகருகே வசித்து இரண்டு குடும்பத்தினர், நீண்ட நாட்களாக நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களில் ஒரு குடும்பத்தில் இருந்த, 4-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியின் உடல், வீட்டில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் கண்டறியப்பட்ட கொலையாளி..!
சிறுமியின் மரணம் தொடர்பான தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் உடலை அவரது தாய் பார்த்த நேரத்தில், அந்த வீட்டின் மூலையில் இருந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில், பல திடுக்கிடும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 10-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவன், தொடக்கத்தில், 2 திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை கொலை செய்து விட்டு தப்பினர் என கூறியுள்ளான். இருப்பினும், சந்தேகத்தின்பேரில் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், சிறுமியை படுகொலை செய்த குற்றத்தை மாணவன் ஒப்பு கொண்டான்.
படுகொலை நடந்தது எப்படி?
வாக்குமூலத்தின் படி, தான் கடனாக வாங்கிய ரூ.20 ஆயிரம் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்பதற்காக, சிறுமியின் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாக அந்த மாணவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ராஜேந்திர பார்க் காவல் நிலைய காவலர்கள் பேசுகையில், சிறுமியின் தந்தை வேலைக்கு சென்ற பின்னர், மாணவனின் வீட்டுக்கு சிறுமியின் தாய் மற்றும் சகோதரர் சென்றுள்ளனர். இதனை பயன்படுத்தி, அந்த மாணவன் டியூசன் செல்கிறேன் என பொய் கூறி விட்டு, சிறுமியின் வீட்டுக்கு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான். சிறுமியிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்து விட்டு, வீட்டுப்பாடம் எழுத சிறுமிக்கு உதவியும் செய்திருக்கிறான்.
சிறுமி கழிவறைக்கு சென்றதும், படுக்கையறையில் இருந்த அலமாரியை திறந்து அதில் இருந்த லாக்கர் சாவிகளை கொண்டு சில நகைகளை திருடியிருக்கிறான். அப்போது திரும்பி வந்த சிறுமி, அந்த மாணவர் திருட்டில் ஈடுபடுவதை கண்டிருக்கிறாள். உடனடியாக நகையை மாணவனிடம் இருந்து பறிக்க முயன்றபோது, அவன் பால்கனி வழியே நகையை வெளியே வீசியுள்ளான். ஆனால், சிறுமி தொடர்ந்து போராடி இருக்கிறார். இதனால், சிறுமியை மாணவன் கடுமையாக தாக்கி கழுத்தை நெறித்துள்ளார். இதில் அந்த சிறுமி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்த கற்பூர கட்டிகளை சிறுமியின உடலின் மீது குவித்து தீயிட்டு கொளுத்தியுள்ளான்” என தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை:
சிறிது நேரம் கழித்து, சிறுமியின் தாய் அழைப்பு மணியை அடித்தார், ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. குடியிருப்பில் இருந்து புகை வருவதைக் கண்ட அவர் சத்தம் போட்டுள்ளார். அப்போதுதான் மற்ற குடியிருப்பாளர்கள் அங்கு வந்ததோடு, பால்கனி வழியே வீட்டுக்குள் சென்று கதவ திறந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் நண்பர்களிடமும் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.