International Yoga Day 2024: சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.


10வது சர்வதேச யோகா தினம்:


பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீரில் இருந்து 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை வழிநடத்தினார். பதற்றத்திற்கு சற்றும் பஞ்சமில்லாத ஸ்ரீநகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால், இன்றைய நிகழ்வானது தேசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


மோடி தலைமையில் யோகா:


பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீரில் உள்ள விஐபிக்கள், குழந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் என சுமார் 4,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 30 நிமிட லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஸ்ரீநகரின் தால் ஏரிக்கரையில், ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு வளாகத்தில் யோகா நிகழ்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், "சுய மற்றும் சமூகத்திற்கான யோகா", அதாவது தனிநபர் நல்வாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் யோகாவின் முக்கிய பங்கை வலியுறுத்துவது ஆகும்.






ஏன் ஸ்ரீநகரில் கொண்டாட்டம்?


கடந்த காலங்களில் டெல்லியின் கர்தவ்யா பாதை, சண்டிகர், டேராடூன், ராஞ்சி மற்றும் ஜபல்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கடந்த ஆண்டு,  நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார். இந்நிலையில் நடப்பாண்டு இறுதியில் ஜம்மு & காஷ்மீரில் நடைபெற உள்ளதால், இந்த முறை ஸ்ரீநகரை பிரதமர் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. பிரதமரின் வருகையை ஒட்டி, எஸ்பிஜி மட்டுமின்றி கடற்படையின் மார்கோஸ் கமாண்டோக்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.






சர்வதேச அளவில் கொண்டாட்டம்:


நியூயார்க்கின் டைம் ஸ்கொயர் பகுதியிலும் இன்று யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பாக பேசிய அங்குள்ள இந்திய தூதர் பினயா பிரதான், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறோம். பல நாடுகளைச் சேர்ந்த யோகா ஆர்வலர்கள் எங்களுடன் உள்ளனர். இது முழுவதுமாக தொடரும். இன்று நாம் 8,000 முதல் 10,000 பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார். இதேபோன்று பல்வேறு உலக நாடுகளிலும் யோகா தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.


ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்:


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லடாக்கின் லேயில் உள்ள கர்னல் சோனம் வாங்சுக் மைதானத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கொல்கத்தாவிலும் பிஎஸ்எஃப் வீரர்கள் யோகா செய்தனர். இதேபோன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் யோகா தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.