மக்களவையின் தற்காலிக ( இடைக்கால ) சபாநாயகராக பருத்ருகரி மஹ்தப்பை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இடைக்கால சபாநாயகர் நியமனம்:
18வது மக்களவைக்கான தேர்தலானது நடைபெற்று , ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில், மக்களவைக்கான தற்காலிக தலைவராக 7வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வாகிய பாஜகவைச் சேர்ந்த பருத்ருகரி மஹ்தப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை உறுப்பினர்கள் கே.சுரேஷ், டி.ஆர்.பாலு, ராதா மோகன் சிங், ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோர் இடைக்கால சபாநாயகருக்கு உதவுவார்கள் எனவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பதவி பிரமாணம்:
இந்நிலையில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபநாயகர் மஹ்தப் , மக்களவையின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். மேலும், மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து, மக்களவை உறுப்பினர்கள் மூலமாக நிரந்தர மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.