பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையான இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ளவர்களில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் வீடியோ கான்பிரன்சில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு ரோஸ்கர் மேளா என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக பிரதமர் அலுவலத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ரோஸ்கர் மேளா நாடு முழுவதும் 44 இடங்களில் நடைபெறும். இந்த முயற்சிக்கு ஆதரவாக மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணி நியமனம் நடைபெறுகிறது என்று பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஜூலை 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 70,000 நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விநியோகிக்கிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதிச் சேவைத் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இணைவார்கள்.
ரோஸ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ரோஸ்கர் மேளா மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் திறம்பட செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அவர்களின் அதிகாரம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் iGOT கர்மயோகி போர்ட்டலில் உள்ள ஆன்லைன் பக்கமான கர்மயோகி பிரரம்ப் மூலம் தங்களைப் பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள், அங்கு 580 க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகள் 'எங்கேயும் எந்த சாதனமும்' கற்றல் வடிவத்திற்காக கிடைக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 70 ஆயிரம் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்த பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பணி ஆணைகளை வழங்கினார். அதேபோல் கடந்த மாதல் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தகக்து. அதேநேரத்தில் இன்னும் நிரப்பப்படவேண்டிய பணியிடங்கள் இன்னும் அதிகப்படியாக உள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.