மெய்தி சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் தற்போது வரை நீடிக்கும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் கலவரத்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம்:


மணிப்பூர் மாநிலத்தில் காங்கபோக்பி மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி இரு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குக்கி இனத்தை தாண்டி ஒட்டுமொத்த தேசமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே உச்சகட்ட மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் முதல் முறையாக மெய்தி இன ஒருங்கிணைப்பு அமைப்புகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ஹெராதாஸின் வீட்டை அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து அடித்து நொருக்கி தீவைத்து எரித்தனர்.


குக்கி எம்.எல்.ஏ.க்கள்:


மேலும் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின கூட்டமைப்பு இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு மணிப்பூரில் பழங்குடியின மக்கள் தாக்கப்படுவது குறித்த கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் 60 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேர் குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இணைந்து நேற்று ஒரு முக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டனர், அதில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்குமாறும் பாலினம், மதம், சாதி, நிறம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதேபோல பல சம்பவங்கள் அரங்கேறி உள்ளது என குறிப்பிட்டு 4 சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.



  • இம்பாலில் இரண்டு குக்கி பெண்களின் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்.

  • குக்கி இனத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்

  • லாங்கோல் மற்றும் நகாரியன் மலை பகுதிகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு நர்சிங் மாணவிகளை அடித்துக் கொன்ற சம்பவம்

  • இம்பால் நகரின் மையத்தில் குக்கி இனத்தை சேர்ந்த மனநலம் குன்றிய பெண்ணை இரக்கமின்றி கொன்றது என பழங்குடியின மக்களுக்கு எதிராக பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


 மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-ன் கீழ் குக்கி பழங்குடியினருக்கான தனி நிர்வாகத்திற்கான முயற்சியில் அனைத்து சக குடிமக்களுக்கும் ஆதரவளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து  காங்கபோக்பி  சம்பவம் வெளிவந்துள்ள நிலையில், மணிப்பூரில் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும்  இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 114 இறப்புகள், குக்கி சமூகத்திற்கு எதிராகவும் பல காட்டுமிராண்டித்தனமான குற்றங்களில் நடைபெற்றுள்ளதாக கூறி பட்டியலிடப்பட்டுள்ளது.