நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் மணிப்பூர் விவகாரம் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.
மணிப்பூர் விவகாரம்:
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த வன்முறை விவகாரம் ராஜஸ்தான் சட்டசபையில் பேசுபொருளானது. நேற்று (21,ஜூலை, 2023) நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சர் (Minister of state (MoS) for Sainik Kalyan, Home Guard and Civil Defence, Panchayati Raj, and Rural Development) ராஜேந்திர குதா (Rajendra Gudha) பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மணிப்பூரில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் அம்மாநில அரசு தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களால் கூறப்பட்டது. அப்போது ராஜேந்திர குதா கூறுகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். மணிப்பூரில் நடப்பதை பேசுவதற்கு பதிலாக, நம் மாநிலத்தில் உள்ள நிலமை குறித்து நாம் பேச வேண்டியது அவசியம்.” என்று தெரிவித்தார்.
பதவி நீக்கம்:
இதன் பின்னர், ராஜேந்திர குதா அமைச்சர் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. முதலமைச்சர் அசோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நடவடிக்கை எடுத்துள்ளார். இது ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.