கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. பாஜக பலமாக உள்ள மாநிலங்களில், அதன் வேட்பாளர்களுக்கு எதிராக ஒற்றை வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.


தேர்தல் பணியை தொடங்கியுள்ள பாஜக:


அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணியை தொடங்கியுள்ளது பாஜக. அந்த வகையில், மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 3ம் தேதி) நடைபெற உள்ளது.


மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, மத்திய அமைச்சரவை குழுவின் கடைசி கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த சூழலில், பிரதமராக மோடி பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திங்கள்கிழமை முக்கிய முடிவு:


டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் ஜூலை 3ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு மையத்தில்தான், இந்த ஆண்டின் பிற்பகுதியில் G20 உச்சிமாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தனர்.


இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்தலை முன்னிட்டு செய்ய வேண்டியது என்ன? வரவிருக்கும் சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து பாஜக சார்பில் எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த கூட்டத்திற்கு முன்னதாக, அமித் ஷா, நட்டா, பாஜக அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், கட்சி சார்ந்த பிரச்னைகள் குறித்தும் அரசியல் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த சந்திப்பில் நட்டா கலந்து கொண்டதால், கட்சியிலும் ஆட்சியிலும் நிகழ்த்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மாநில அளவிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


நேற்று முன்தினம், மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற கூட்டத்தில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருந்தார். பாஜகவின் முக்கிய கொள்கை பிரச்னைகளில் ஒன்றாக உள்ள பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. 


ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, ஜூலை மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது