கடந்த 2014ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.


பாட்னாவை தொடர்ந்து பெங்களூர்:


எனவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதன் முதல் முயற்சியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் இதில் ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், ஜூலை மாதம், சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில், அதில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தக்கூட்டம் சிம்லாவில் நடைபெறாது என்றும் பெங்களூரவில் நடைபெறும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் வெளியிட்டுள்ளார்.


பாட்னா கூட்டத்தில் நடந்தது என்ன?


முன்னதாக, பாட்னாவில்  நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,"மத்தியில் ஆட்சியில் உள்ள அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட அனைத்து தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றார்.


இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே நடந்த காரசார விவாதம் பேசுபொருளாக மாறியது. டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி வந்தது.


ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்தார்.


இந்த விவகாரத்தில், பாஜகவுடன் காங்கிரஸ் டீலிங் வைத்திருப்பதாகவும் அதனால்தான் காங்கிரஸ் முடிவு எடுக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது. மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை எதிர்கால எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என ஆம் ஆத்மி அறிவித்தது. இது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தியது. 


இதற்கிடையே, வரவிருக்கும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.