பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 25 ஆம் தேதி கர்நாடகாவின் தாவங்கரே நகரில் "விஜய் சங்கல்ப் யாத்ரா" நிறைவு விழாவில் கலந்து கொண்டு, அங்கு ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


கர்நாடக தேர்தல்


கர்நாடாகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற மே மாதம் கர்நாடகா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனை எதிர்கொள்ளும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் பெருமளவில் தயாராகி வருகின்றன. பாஜக தரப்பில் இந்தத் தேர்தலுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இணை பொறுப்பாளராகவும் நியமித்திருந்தது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., கட்சி மார்ச் 1ம் தேதி மெகா பிரசார கூட்டத்தை துவக்கியது. 



விஜய் சங்கல்ப் யாத்திரை


கடந்த முறை போல இல்லாமல், இம்முறை தனி பலத்துடன் ஆட்சியில் அமர பாஜக திட்டம் தீட்டி வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வியூகம் அமைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான், ஆளும் கட்சி தென் கர்நாடக மாநிலம் முழுவதும் நான்கு "விஜய் சங்கல்ப்" யாத்திரையை துவக்கியது. நான்கு யாத்திரைகள் நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து தொடங்கப்பட்டது. தாவணகெரே, சாமராஜநகர், கிட்டூர் மற்றும் கல்யாண் ஆகிய நான்கு இடங்களில் இருந்து துவங்கிய யாத்திரை கிட்டத்தட்ட முடிவுக்கு வர உள்ளது. மாநிலத்தின் 224 தொகுதிகளிலும் இதற்கான பேரணி நடைபெற்றது.


தொடர்புடைய செய்திகள்: Russia Ukraine Crisis: கைது செய்யப்படுவாரா ரஷிய அதிபர் புதின்? உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு..!


தொடக்க விழாவில் மூத்த நிர்வாகிகள்


காங்கிரஸ் கட்சியின், ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரை இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படும் நிலையில், அதனை முறியடிப்பதற்காகவே இந்தத் திட்டத்தை பாஜக கையில் எடுத்திருந்தது. கர்நாடகாவின் நான்கு விதமான இடங்களில் தொடங்கிய இந்த யாத்திரை, கடைசியில் ஒரே இடத்தில் நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டது. யாத்திரையின் தொடக்கத்தில் ஜெ.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்ற மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



நிறைவு விழாவில் மோடி


இந்த நிலையில் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த நிகழ்விற்கு பிரதமர் மோடி தலைமை தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகை மே மாதம் நடக்க உள்ள தேர்தலில் பிரதிபலிப்பதற்கான திட்டம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.