இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதலே பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் கருத்துக்கள் நிலவி வருகிறது.
5 மணிக்கு பேசப்போகும் பிரதமர் மோடி:
இந்த சூழலில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தனது உரையில் முக்கியமான விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் சூழலில், பிரதமர் மாேடி இன்று பேசுகிறார். இதனால், ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து பிரதமர் மோடி தனது உரையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பேசப்போகிறார்?
சர்வதேச அளவில் அமெரிக்கா இந்தியாவிற்கு தரும் நெருக்கடி, ரஷ்யா- சீனாவுடனான நெருக்கம் ஆகியவற்றின் மத்தியிலும், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அமெரிக்காவிடம் நெருக்கம் காட்டும் பாகிஸ்தான், தற்போது சவுதியிடமும் நெருக்கம் காட்டி வரும் சூழலில் பிரதமர் மோடி இன்று பேசுகிறார்.
மோடியின் பேச்சு எது குறித்து இருக்கப்போகிறது? என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாவிட்டாலும், நாளை முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருவதால் அதுதொடர்பாகவே பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரவைத்த கடந்த கால உரைகள்:
மோடியின் கடந்த கால உரைகளை எடுத்துப்பார்த்தால், மோடி பேசுகிறார் என்றாலே மக்களுக்கு ஒரு கிலி இருப்பது வழக்கமாக உள்ளது. ஏனென்றால், 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டையே அதிரவைத்தார்.
அதன்பின்பு, 2019ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி பாலகோட் தாக்குதல் குறித்த அறிவிப்பு, 2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அதே ஆண்டு கொரோனாவின் தீவிரம் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி மீண்டும் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். கடைசியாக நடப்பாண்டு மே 12ம் தேதி பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசினார்.
எதிர்பார்ப்பில் மக்கள்:
மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய ஒவ்வொரு உரையும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்துள்ளது. இதனால், இன்றைய உரை குறித்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அரசியல் நிபுணர்கள் பெரும்பாலும் இது ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய உரையாகவே இருக்கும் என்று கூறினாலும், வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள 7 லட்சம் கோடி வர்த்தகம், எச்1பி விசா கட்டண உயர்வு என்று பல நெருக்கடிகளை இந்தியாவுக்கு அளித்து வரும் அமெரிக்க உறவு பற்றி ஏதும் பேசுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.