H-1B Visa: அமெரிக்க அரசின் H-1B விசாவிற்கான புதிய கட்டணம் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்கும் என அஞ்சப்படுகிறது.

Continues below advertisement

H-1B விசா கட்டண விவகாரம்:

வெளிநாட்டு வாழ் மக்கள் நிரந்தர குடியேறிகளாக இல்லாமல், அமெரிக்காவில் தங்கியிருந்து அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிய H-1B விசா வழிவகை செய்கிறது. இதன் மூலம் அதிகளவில் பயன்பெறுபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தான், அந்த விசாவிற்கு வசூலிக்கப்பட்டு வந்த சுமார் ரூ.1.5 லட்சம் என்ற கட்டணத்தை, சுமார் ரூ.90 லட்சமாக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைதொடர்ந்து, H-1B விசா தொடர்பான பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. விசாவை வைத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு வெளியே தங்கியிருக்கும் தங்களது ஊழியர்கள், அடுத்த ஒருநாளில் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என மைக்ரோசாஃப்ட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் உத்தரவிட்டன. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தான், H-1B விசாவிற்கான புதிய கட்டணம் தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.

Continues below advertisement

வெள்ளை மாளிகை விளக்கம்:

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் அளித்த விளக்கத்தின்படி, ”சுமார் ரூ.90 லட்சம் என்ற புதிய கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டியதில்லை. இது ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணமாகும். அதுவும் புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஏற்கனவே H-1B விசா கொண்டிருப்பவர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. ஏற்கனவே H-1B விசாக்களை வைத்துக்கொண்டு தற்போது நாட்டிற்கு வெளியே இருப்பவர்களிடம் மீண்டும் நுழைய $100,000 கட்டணம் வசூலிக்கப்படாது” என விளக்கமளித்துள்ளார். முன்னதாக இந்த புதிய கட்டணம் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், புதிய கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும். புதியதாக விண்ணப்பிப்பவர்களோடு, புதுப்பித்தலை நாடுபவர்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என கூறி அதிர்ச்சி அளித்தார். ஆனால், அவரது விளக்கத்தை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

கலக்கத்தில் நிறுவனங்களும்.. ஊழியர்களும்..

ட்ரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பின் விரிவான தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், பல தொழில்நுட்ப நிறுவனங்களும் கலக்கத்தில் மூழ்கின. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரித்தன. வெளிநாட்டில் உள்ள ஊழியர்களும் செப்டம்பர் 21ம் தேதி நள்ளிரவிற்குள் அமெரிக்கா திரும்பவும் உத்தரவிட்டன. வெள்ளிக்கிழமை நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வந்த விமானங்களில் இருந்த சிலர், மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அச்சத்தில் இறங்கிவிட்டதாக சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கிள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான், ஏற்கனவே H-1B விசாக்களை கொண்டிருப்பவர்களுக்கு புதிய கட்டணம் பொருந்தாது என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கனவு வேலைக்கு செக் தான்:

ஞாயிற்றுக்கிழமை இரவு 12.01AM முதல் அமலுக்கு வரும் புதிய கட்டணமானது அடுத்த ஓராண்டிற்கு செயல்பாட்டில் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் வெளிநாட்டவர்களால் பறிக்கப்படுவது தடுக்கப்படும் என ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா வழங்கிய 40 ஆயிரம் H-1B விசாக்களில் சுமார் 72 சதவிகிதம் இந்தியர்களால் பெறப்பட்டது.

விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கணினி நிரலாளர்கள் போன்ற சிறப்புத் திறன்களைக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமெரிக்காவில் பணிபுரிய நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்ய அனுமதிக்கின்றன, ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகள் ஆனால் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். இந்த விசாக்களை பெற குறிப்பிட்ட பணியாளர்களுக்காக, நிறுவனங்களே ஒரு கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதனை தான் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது 90 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியில் சேர்க்க அமெரிக்க நிறுவனங்கள் தயங்கக் கூடும். அதேநேரம், புதிய கட்டணத்திற்கு எதிராக வழக்கு தொடரவும் பல நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.