பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அவற்றில் சில முக்கியமானவை என்னென்ன?


370 பிரிவு நீக்கம்:


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது. அந்தப் பிரிவு பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நீக்கியது. இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீர் பகுதியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. 


அயோத்தி ராமர் கோயில்:


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நீண்ட நாட்களாக வழக்கு நடந்து கொண்டிருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் அந்த வழக்கில் சுமூகமாக முடித்து வைத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 2023ஆம் ஆண்டிற்குள் அங்கு ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா தடுப்பூசி:


உலகம் முழுவதும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா நோய் பாதிப்பை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. இதன்மூலம் இந்தியா முழுவதும் சுமார் 193 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜானா:


கொரோனா நோய் தொற்று காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று. கொரோனா பாதிப்பு காரணமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. 


ஆஃப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் சிக்கியிருந்த இந்தியர்கள் மீட்பு:


ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் படைகள் ஆக்கிரமைப்பு செய்த போது அங்கி சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆபிரேஷன் தேவ் சக்தி என்ற பெயரில் ஆஃப்கானிஸ்தானில் சிக்கியிருந்த 700 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அதன்பின்னர் உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு சிக்கியிருந்த 23 ஆயிரம் மாணவர்கள் மீட்கப்பட்டனர். இதற்காக நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைன் பயணம் செய்திருந்தனர். 


இவ்வாறு பல்வேறு முக்கிய முடிவுகளை கடந்த 8 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இந்த 8 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் சிம்லாவில் பாஜக சார்பில் கொண்டாடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றுகிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண