குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் திட்டத்தின் பலன்களை பிரதமர் நரேதிர மோடி காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் என்றால் என்ன?
கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் உருவாக்கப்பட்ட ஒரு நிதி அமைப்பு தான் பிஎம் கேர்ஸ் ஃபண்ட். இதிலிருந்து கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் கரம் தான் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் திட்டம்.


இன்றைய நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர்  மோடி, பிஎம் கேர்ஸ் என்பது, கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் உள்ளனர் என்பதற்கான பிரதிபலிப்பு. உயர்கல்வி அல்லது தொழில் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கும் பிஎம் கேர்ஸ் திட்டம் உதவி செய்யும் என விவரித்தார். 


இத்திட்டத்தின் மூலம், குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பிஎம் கேர்ஸ் மூலம் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கொரோனாவால் பெற்றோரை இழந்த, 23 வயதை அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்தை தவிர, ஆயுஷ்மான் அட்டை மூலம் உடல்நலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆலோசனைகள் சம்வாத் ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.


பிரதமரின் அறிவுரை:
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் தங்கள் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகளுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்து கொண்டார். தற்போதுள்ள சூழலில், அந்த குழந்தைகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. யாருக்காக பிஎம் கேர்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கும் பிரதமர் எடுத்துக் கூறினார். அப்போது, தான் பிரதமராக உங்களுடன் பேசவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக பேசுவதாக தெரிவித்தார்.


அவர் பேசும்போது, வாழ்க்கையில், விரக்தியின் விளிம்பில் இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் ஒளிக்கதிர் தெரியும். இதற்கு நம்முடைய நாடே மிகச்சிறந்த உதாரணம். விரக்தி தோல்வியாக மாற குழந்தைகள் அனுமதித்து விட வேண்டாம். பெரியவர்களும், ஆசிரியர்களும் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் நடந்துக் கொள்ள வேண்டும். இக்கட்டான தருணங்களில் நல்ல நூல்கள் நமக்கு நம்பகமான நண்பனாக இருக்கும். நோயிலிருந்து மீள கேலோ இந்தியா, உடற்தகுதி இந்தியா போன்ற இயக்கங்களில் ஈடுபடவும், யோகாவை மேற்கொள்ளவும் என்று குழந்தைகளுக்கு நம்பிக்கை கூறினார்.


வேகாமான வளர்ச்சி காண்கிறோம்:
"இக்கட்டான சூழலில், இந்தியா தனது பலத்தை நம்பியிருப்பதாகவும், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரை இந்தியா நம்பியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரச்சினைகளுடன் இல்லாமல் தீர்வை தருவதாக இந்தியா வெளிவந்தது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெருந்தொற்றை தடுப்பதற்கான மருந்தையும், தடுப்பூசிகளையும் வழங்கினோம். அனைத்து குடிமகன்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாகவும், உலக நாடுகள் வியந்து பார்க்கும் நாடாகவும் இந்தியா உள்ளது" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.






தீயசூழல்களில் இருந்து மீண்டோம்:
இன்று தங்கள் அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும், தங்கள் அரசு மீது நாட்டு மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பல கோடி ஊழல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பாகுபாடுகள் போன்ற  2014-ம் ஆண்டில் சிக்கியிருந்த தீயசூழல்களில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இந்த நிகழ்வு குழந்தைகளான உங்களுக்கும் ஒரு சிறந்த உதாரணம். அனைத்துக் கடினமான நாட்களும் கடந்து போகும் என்று பிரதமர் தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம், ஜன்தன் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் திட்டம் போன்ற நலத்திட்டங்களை பற்றி எடுத்து கூறிய பிரதமர் மோடி, அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன்  அரசாங்கம் செல்வதாக குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளை ஏழைகள் நலன் மற்றும் சேவைக்காக அரசு தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளது. ஒரு குடும்ப உறுப்பினராக, உங்களின் துயரங்களையும், சுமைகளையும் குறைப்பதற்கும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.