அசாம் மாநிலத்தில் இருக்கும் கசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி யானை மற்றும் ஜீப் சஃபாரி சென்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மக்கள் அனைவரும் கட்டாயம் இயற்கை அழகு கொஞ்சும் கசிரங்கா பூங்காவிற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என பிரதமர் அறிவுறித்தியுள்ளார். 






பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு கசிரங்கா உயிரியல் பூங்காவிற்கு சென்றார்.






பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் யானை மற்றும் ஜீப் சஃபாரி சென்றார். பூங்காவிற்குள் உள்ள மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் யானை சஃபாரியுடன் அவரது பயணம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு ஜீப் சஃபாரி மேற்கொண்டார். பிரதமருடன் பூங்கா இயக்குனர் சோனாலி கோஷ் மற்றும் மூத்த வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.



இது தொடர்பான பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவில், “இன்று காலை நான் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்தேன். பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள யுனெஸ்கோ சான்று பெற்ற இந்த தளமானது, கம்பீரமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.



கசிரங்கா பூங்காவில் இருக்கும் லக்கிமாயி, பிரத்யும்னன் மற்றும் பூல்மை ஆகிய மூன்று யானைகளுக்கு கரும்பை பிரதமர் மோடி ஊட்டி விட்டார். அசாம் மாநிலத்தில் 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.