குஜராத்தில் காதி உத்ஸவ் நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் கை ராட்டை சுற்றினார்.


இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா என்ற நிகழ்ச்சி கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


இதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் 'காதி உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத்தின் போது காதி மற்றும் அதன் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் 'காதி உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை சபர்மதி ரிவர்ஃப்ரன்ட் அமைப்பு ஒருங்கிணைத்தது. குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து 7500 பெண்கள் இந்த உத்ஸ்வத்தில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் 1920 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இருந்த 22 சக்கரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட ராட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டன.






இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இளைஞர்கள் மத்தீயில் கதர் துணியை பிரபலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரதமரின் தொடர் நடவடிக்கைகளால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாட்டில் காதி ஆடையின் விற்பனை 4 மடங்கு அதிகரித்துள்ளது. குஜராத்தில் கதர் ஆடை விற்பனை 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனைக் கொண்டாட 7 ஆயிரத்து 500 சகோதரிகள் மற்றும் மகள்கள் ராட்டையில் நூல் நூற்பு செய்து வரலாறு படைக்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்துள்ளது. அன்புச் சகோதரிகள் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.


ராட்டையை சுற்றுவது என்னை குழந்தை பருவத்திற்கு கொண்டு சென்றது. கதர் சுதந்திர இயக்கத்தின் சக்தியாக மாறி அடிமைச் சங்கிலிகளை உடைத்ததை நாம் பார்த்தோம். அதே கதர் தற்போது இந்தியாவை வளர்ச்சியடைய செய்வதற்கும், தன்னிறைவு பெறுவதற்கும் உத்வேகமாக அமையும். 


சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகளால் கதர் நாட்டின் சுயமரியாதை சின்னமாக மாற்றப்பட்டது. ஆனால், அதே கதர் சுதந்திரத்திற்கு பிறகு தாழ்வாக பார்க்கப்பட்டது. இத்தகைய சிந்தனையால் கதர் மற்றும் கிராமப்புற தொழில்கள் அழிந்தன. அதனை நாம் இப்போது மீண்டும் மீட்டெடுத்து வருகிறோம்" என்றார்.