தலித் என்ற காரணத்தால் பாஜக எம்.பி. ஆர்.எஸ்.கதேரியா தன் காலைத் தொட்டு வணங்க புரி சங்கராச்சாரியார் நிஸ்சலநந்தா சரஸ்வதி அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்டைப் பகிர்ந்தார். அதில் அவர், போதா கவி கி நீதி என்று தலைப்பிட்டு பாஜக எம்பி ஆர்.எஸ்.கதேரியாவை புரி சங்கராச்சாரியர் தலித் என்றதால் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.



இதற்கு விளக்கமளித்த ஆர்.எஸ்.கதேரியா, இது மிகவும் தவறான செய்தி. இப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடைசியாக நான் மார்ச் 16ஆம் தேதியன்று விருந்தாவனில் தான் சங்கராச்சாரியரை சந்தித்தேன். எங்கள் நகாரியா கிராமத்தில் மே மாதம் நடந்த பகவத் கதா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்க அவரை சென்று சந்தித்தேன். நாங்கள் ஒருமணி நேரம் ஒன்றாக இருந்தோம். நான் அவரின் ஆசியைப் பெற்றேன். அகிலேஷ் யாதவ் கூறுவது போல் சங்கராச்சாரியரின் பாதங்களைத் தொட்டு வணங்க அனுமதி மறுக்கப்படவில்லை. 


அகிலேஷ் யாதவ் உண்மையறியாமல் இப்படியான கருத்துகளைப் பகிர்வது சங்கராச்சாரியரை அவமதிக்கும் செயலாகும். இது அகிலேஷின் முட்டாள்தனத்தையும் சிறுபிள்ளைத் தனத்தையும் காட்டுகிறது. நான் இதனைக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


அகிலேஷ் யாதவ் பகிர்ந்த ஃபேஸ்புக் போஸ்டை பகிர்ந்தே பாஜக எம்பி ஆர்.எஸ்.கதேரியா இதனைத் தெரிவித்துள்ளார்.


உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உபி-இல் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜகவே ஆட்சியில் இருந்தது. கடந்த 2017 தேர்தலில் 312 இடங்களில் வென்று பாஜக மாபெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், அதேபோன்ற வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. இத் தேர்தலில் பாஜக 255 இடங்களிலும் சமாஜ்வாடி 111 இடங்களிலும் வெற்றி பெற்றது. 300க்கும் மேல் வெற்றி பெறுவோம் என்று முழங்கிய பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் முட்டுக்கட்டை போட்டார். இதனால் அடுத்து வரும் 2024 தேர்தலில் இவர் கை ஓங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இதனால் தொடர்ந்து பாஜகவை விமர்சிப்பதில் அகிலேஷ் யாதவ் சிறு வாய்ப்பையும் விட்டுவைப்பதில்லை. அந்த வகையிலேயே பாஜக எம்.பி. ஆர்.எஸ்.கத்தேரியாவின் சர்ச்சையையும் அகிலேஷ் கையில் எடுத்துள்ளார் என்று அரசியல் விமர்சர்களால் கூறப்படுகிறது.