பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) அன்று காலை 11 மணிக்கு 92ஆவது 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 75ஆவது சுதந்திர தின நிறைவு விழாவில் நாட்டின் கூட்டுப் பலத்தைக் கண்டதாக மோடி பெருமிதம் கொண்டுள்ளார். 






தொடர்ந்து பேசிய அவர், "திரங்கா பிரசாரத்தில் புதுமையான யோசனைகள் வருவதைக் கண்டோம். ஸ்வச்சதா அபியான் மற்றும் தடுப்பூசி பிரசாரத்தில் இந்தியர்கள் முன்னோக்கி வருவதைப் பார்த்தோம். அதே வழியில் திரங்கா பிரச்சாரத்தில் இந்தியர்கள் ஒன்றிணைவதைப் பார்த்தோம்" என்றார்.


இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதற்கான உதாரணங்களை மோடி எடுத்துரைத்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சுதந்திரத்தின் அமிர்த விழா ஆகஸ்ட் 2023 வரை தொடரும். நான்கு மாதங்களுக்கு முன்பு ‘அமிர்த மஹோத்சவ்’ பற்றி பேசினேனே். கிராமங்கள் மற்றும் நகரங்கள் பல்வேறு வழிகளில் தண்ணீரை சேமிக்க அமிர்த சரோவர் வகுக்கப்பட்டது.


வாரங்கல், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் அமிர்த சரோவர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அமிர்த சரோவர் திட்டம் விலங்குகளுக்கு தண்ணீர் கொடுக்கவும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் பயன்படுத்தப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றோம்.


ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்கும் நோக்கில் செயல்படுமாறு மக்களை வலியுறுத்தியதுகிறேன். செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக பார்க்க வேண்டும்" என்றார்.


2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடுவது குறித்தும் பேசிய மோடி, “பழங்காலத்திலிருந்தே, தினை நமது கலாச்சாரத்தின் மிக முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. விவசாயிகள் தினைகளை பயிரிட்டு பயன்பெற வேண்டும். தினை தோசை, எனர்ஜி பார்கள் மற்றும் பல்வேறு தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை இன்றைய ஸ்டார்ட்அப்கள் தயாரிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.


"புதிய இந்தியாவின்" இன்றியமையாத அங்கமாக இணையம் எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்து பேசிய மோடி, மக்கள் தங்கள் வணிகங்களை நடத்தும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டு வர கிராமங்களில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் கல்வியை முடிக்க இணையமும் உதவியுள்ளது என்றும் மோடி கூறினார்.