டெல்லியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா வின் தொடக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தார். அவர் பேசிய விவரங்களை தற்போது காணலாம்.
நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் விதமாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சலி தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி பேசியது என்ன.?
அதன்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “பொய்க்கு எதிரான உண்மை.. அநீதிக்கு எதிரான நீதி.. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி நாள். நாளை விஜயதசமி பண்டிகை.. தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்ற நாள்“ என குறிப்பிட்டார்.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல என குறிப்பிட்டார். ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகால பயணம் முன்னோடி இல்லாதது எனக் கூறிய அவ, 100 ஆண்டு கால மகத்தான பயணம், தேசத்தின் வளர்ச்சியை கட்டியெழுப்பியதில் முக்கிய பங்கு வகித்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், ஆர்எஸ்எஸ் நாட்டிற்கு பல சேவைகளை செய்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் என்பது, தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம் என குறிப்பிட்டார். அதேபோல், தானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராக கொண்டவன்தான் என பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் லட்சுமன் வாமன் பரஞ்பே ஆகியோரால், கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்கம் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு, கலாச்சார விழிப்புணர்வு போன்ற பண்புகளை மக்களிடையே கொண்டு செல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. தற்போது இந்த அமைப்பின் அகில இந்திய தலைவராக இருப்பவர் மோகன் பகவத்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களில் இயங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவக் சங்கம் என்றும், மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவக் சங்கம் என்றும், ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவக் சங்கம் என்ற பெயரிலும் இயங்கி வருகிறது.
ஆர்எஸ்எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை. மாறாக, அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சி ஆர்எஸ்எஸ் சங்கப் பரிவார் அமைப்புடன் அதிக தொடர்புடையது.
தற்போது நடைபெறும் இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றுச் சாதனைகளை கௌரவிப்பதோடு, இந்திய பண்பாட்டுப் பயணத்திற்கு இந்த அமைப்பு அளித்துவரும் பங்களிப்பு, தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற இந்த அமைப்பின் தூதுரை ஆகியவற்றை எடுத்துரைக்கும் நிகழ்வாக இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.