UP Marriage: உத்தரபிரதேசத்தில் முதல் மனைவியை இழந்து தனிமையில் வசித்து வந்த முதியவர், இரண்டாவது திருமணம் செய்த மறுநாளே உயிரிழந்துள்ளார்.
35 வயது பெண்ணை மணந்த 75 வயது முதியவர்
முதல் மனைவி இறந்த பிறகு தனிமையில் வசித்து வந்த 75 வயதான சங்ருராம், உறுதுணையாக இருப்பார் என தனது வயதில் பாதியை மட்டுமே கொண்டிருக்கும் பெண்ணை திருமணம் செய்த மறுநாலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக சங்ருராமின் முதல் மனைவி உயிரிழந்துள்ளார். குழந்தைகள் யாரும் இல்லாததால், சுயமாக விவசாயம் செய்து தனியாக வசித்து வந்துள்ளார்.
எதிர்ப்பை மீறி திருமணம்
உறவினர்கள் சொன்ன தகவல்களின்படி, சங்ருராமின் மறுமணம் செய்துகொள்ளும் முடிவிற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார். வயதான காலத்தில் என்னை கவனித்துக்கொள்ள எனக்கு ஒரு துணை வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 29ம் தேதியன்று ஜலால்பூர் பகுதியை சேர்ந்த 35 வயதான மன்பவதி எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். நீதிமன்றத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்த இந்த தம்பதி, கோயிலுக்கும் சென்று இந்து முறைப்படி சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்துள்ளனர். மறுநாள் தேன் நிலவுக்காக வெளியூர் செல்ல முடிவு செய்திருந்ததகாவும் கூறப்படுகிறது.
திடீரென மரணம்
எதிர்பாராத விதமாக திருமணமான மறுநாள் அதாவது 30ம் தேதி காலை, சங்ருராமின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சேர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சங்ருராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் மரணம் கிராம மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சிலர் இதை வயது மூப்பால் ஏற்பட்ட இயற்கையான நிகழ்வு மட்டுமே என்று குறிப்பிட்டாலும், மற்றவர்கள் சங்ருராமின் மரணத்தில் சந்தேகம் எழுவதாக கேள்வி எழுப்பியுள்ளார்கள். டெல்லியில் வசிக்கும் உறவினர்கள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சங்ருராமின் இறுதிச் சடங்குகளை நிறுத்திவிட்டனர். உடல் தகனம் செய்வதற்கு முன்பு அவர்கள் அங்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸ் விசாரணை அல்லது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்பது குறித்தும் உள்ளூர்வாசிகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
மன்பவதி சொல்வது என்ன?
இதனிடையே தனது திருமணம் குறித்து பேசிய மன்பவதி, “திருமணம் நடந்த நாளின் இரவு முழுவதையும் நாங்கள் இருவரும் பேசியே கழித்தோம். நான் வீட்டு பணிகள் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர் குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் பேசி ஒருமனதாக முடிவெடுத்தோம். வாழ்க்கையை சேர்ந்து எப்படி நேர்மறையாக முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் விவாதித்தோம்” என்று தெரிவித்து கணகலங்கியுள்ளார்.