இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பின் மாநாடு இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த ஜி 7 மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியா, கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாடு இன்று காணொலி காட்சி மூலமாக தொடங்கியது. மேலும், நாளை இரு அமர்வுகளில் பிரதமர் மோடி பேச உள்ளார். நடப்பாண்டிற்கான ஜி 7 உச்சி மாநாடு `சிறப்பாக உருவாக்கம்’ என்ற கருப்பொருள் தலைப்பின்கீழ் நடைபெறுகிறது. இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து எப்படி முழுமையாக மீள்வது, கொரோனா தொற்று உள்ளிட்ட வைரஸ்களை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச உள்ளனர்.
பிரதமர் மோடி காலநிலை மாற்றம், அதை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் பேச உள்ளார். மேலும், இந்த மாநாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகம் மூலம் எதிர்கால செழிப்பை ஊக்குவித்தல், பல்லுயிரியலைப் பாதுகாத்தல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.