பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடந்தி வரும் தாக்குதல் உலக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலை, ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்கள் போரில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படை திடீர் தாக்குதல் நடத்தியது.


உக்கிரம் அடையும் இஸ்ரேல் போர்:


இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், 3,478 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, காசா நகர மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழி தாக்குதல் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. 


மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்து, பாதுகாப்பு தேடி வரும் மக்கள் மீது இம்மாதிரியாக தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இந்த நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி:


இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாலஸ்தீன அதிபர் ஹெச்.இ. மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் சிக்கி பொதுமக்களின் உயிரிழந்ததற்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை நாங்கள் தொடர்ந்து அனுப்புவோம். 


பயங்கரவாதத்தின் மீதான எங்கள் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துகொண்டோம். அந்த பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.


எக்ஸ் வலைதளத்தில் நேற்று, பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், "இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிர்ச்சியை தருகிறது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.


இதற்கிடையே, இஸ்ரேல் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். 


பிரிட்டன் பிரதமருக்கு முன்னதாக, நேற்று, இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றிருந்தார். அங்கு பேசிய அவர், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் இல்லை என்றும் இஸ்லாமிய ஜிகாத் குழுவே காரணம் என குற்றஞ்சாட்டினார்.


இதையும் படிக்க: Rishi Sunak Israel: "பயங்கரவாதத்தின் கோர முகம்" - இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பிரதமர்