அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


காங்கிரஸ் எம்பிக்கு ஸ்கெட்ச் போட்ட வருமான வரித்துறை:


அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீடுகளிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பீரோக்கள் மற்றும் பெட்டிகள் நிரம்ப பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என்றாலும், 150 கோடி முதல் 300 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மீட்கப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய நோட்டு எண்ணும் இயந்திரம், 50 கோடி ரூபாய் வரை எண்ணிய பிறகு பழுதடைந்தது. ஒடிசாவில் உள்ள போலங்கிர், சம்பல்பூர் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, லோஹர்டகா ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.


"மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் திருப்பி அளிக்கப்படும்"


ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் உள்ள பௌத் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் (பிடிபிஎல்) நிறுவனத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியை சேர்ந்த தீரஜ் சாஹு, காங்கிரஸ் கட்சியில் மாணவர் தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.






இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ள பிரதமர் மோடி, "நாட்டுமக்கள் இந்த நோட்டுக் குவியலைப் பார்த்துவிட்டு அவர்களின் 'நேர்மையான' பேச்சை கேட்க வேண்டும். பொது மக்களிடம் எது கொள்ளையடிக்கப்பட்டதோ, அதன் ஒவ்வொரு பைசாவும் மக்களிடம் திருப்பி அளிக்கப்படும். இது, மோடி அளிக்கும் வாக்குறுதி" என்றார்.