பாஜக குறிவைக்கும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது. 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.


சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பெரிய பிரச்னையாக கருதப்பட்ட உட்கட்சி பூசலுக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது.


ராஜஸ்தானில் வெற்றி பெறப்போவது யார்?


அதுமட்டும் இன்றி, அசோக் கெலாட் அறிவித்த பல சமூக நல திட்டங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சித்து வருகிறது. அதேபோல, பிரதமர் மோடியின் செல்வாக்கை பயன்படுத்தி மக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது.


இந்த நிலையில், ராஜஸ்தானில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகிறார். பாலி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், "ராஜஸ்தான் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு தேவை. காங்கிரசுக்கு ஊழல் மற்றும் குடும்ப அரசியலை விட முக்கியமானது எதுவுமில்லை. 


"ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரஸின் உண்மையான முகம் இதுதான்"


சமரச அரசியலை தவிர வேறு எதையும் காங்கிரஸ் நினைப்பதில்லை. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் ‘நாரிசக்தி வந்தான் சட்டம்’ இயற்றப்பட்டதில் இருந்தே, பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திமிர்பிடித்த கூட்டணியின் தலைவர்கள் எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் குறித்து மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்" என்றார்.


பெண்கள் குறித்து INDIA கூட்டணியின் மூத்த தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி, "பிகார் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.


ஆனால், இது குறித்து எந்த காங்கிரஸ் தலைவர்களும் எதுவும் கூறவில்லை. ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரஸின் உண்மையான முகம் இதுதான். தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களைக் கண்டு காங்கிரஸ் கண்ணை மூடிக் கொள்கிறது. இன்று, நாட்டின் வளர்ச்சிக்காகவும் குறிக்கோளுக்காகவும் இரவு பகலாக உழைத்து வருகிறோம். மேலும் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா அடையும் உயரத்தில் ராஜஸ்தான் பெரும் பங்கு வகிக்கும்" என்றார்.