டெல்லியில் அமைந்துள்ள பிரகதி மைதானம் புதுப்பிக்கப்பட்டு, இன்று திறக்கப்பட்டுள்ளது. அதற்கு, பாரத் மண்டபம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமான பாரத மண்டபத்தின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.
தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மோடி உறுதி தெரிவித்துள்ளார்.
"முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும்"
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும். இது மோடியின் உத்தரவாதம். எனது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்தில் இந்தியா 10ஆவது இடத்தில் இருந்தது. எனது இரண்டாவது பதவிக்காலத்தில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறினோம்.
சாதனைப் பதிவுகளின் அடிப்படையில், மூன்றாவது ஆட்சி காலத்தில், நமது பொருளாதாரம் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறும். பாரத மண்டபம் போன்ற மையங்கள் நாட்டின் பெருமையை உயர்த்தும் அதே வேளையில், அதைத் தடுக்க முயன்றவர்களும் உள்ளனர்.
பாரத மண்டபத்தை தடுக்க சிலர் முயல்கின்றனர். ஒவ்வொரு வேலையையும் நிறுத்துவது சிலரின் நிர்ப்பந்தமாக உள்ளது. எத்தனையோ வழக்குகள் போடப்பட்டன. கொஞ்ச நாள் கழித்து அந்த ஆட்கள் சில நிகழ்ச்சிகளுக்கு இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
"5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்"
கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை, இந்தியாவின் உள்கட்டமைப்பு மாறிக்கொண்டிருக்கிறது. உலகின் மிக உயரமான ரயில் பாலம், மிக உயரத்தில் உள்ள மிக நீளமான சுரங்கப்பாதை இந்தியாவில் உள்ளது. மிக உயரமான மோட்டார் சாலை, மிகப்பெரிய அரங்கம், மிகப்பெரிய சிலை என அனைத்துமே இந்தியாவில்தான் உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில், இந்தியாவில் 20,000 கிமீ ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்ட நிலையில், எனது அரசாங்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகளை மின்மயமாக்கியது. இப்போது ஒவ்வொரு மாதமும், 6 கிமீ மெட்ரோ லைன், 4 லட்சம் கிமீ கிராமச் சாலைகளை கட்டி முடிக்கிறோம். 2014இல் டெல்லி விமான நிலையத்தின் கொள்ளளவு ஆண்டுக்கு 5 கோடியாக இருந்தது. இப்போது 7.5 கோடி. தற்போது, விமான நிலையங்களின் எண்ணிக்கை 150ஐ எட்டியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்தியாவில் கடும் வறுமை முடிவுக்கு வரும் என்று சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கொள்கைகள், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதையே காட்டுகிறது" என்றார்.