இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் புதிய மைல்கள்:


மாநிலங்களவைக்கு தலைமை வகித்ததன் மூலம், நாகாலாந்தை சேர்ந்த பாஜக எம்.பி. பேங்னான் கோன்யாக், இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் புதிய வரலாறை படைத்துள்ளார். நாகாலாந்தை சேர்ந்த பெண் எம்பி ஒருவர், மாநிலங்களவைக்கு தலைமை வகிப்பது இதுவே முதல் முறை. 


பேங்னான் கோன்யாக் உள்பட மேலும் மூன்று பெண் எம்பிக்களை கடந்த ஜூலை 17ஆம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் குழுவுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பரிந்துரை செய்தார்.


கடந்த 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், நாகாலாந்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்பி ஆனார் பேங்னான் கோன்யாக். நாகாலாந்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வான இரண்டாவது பெண் எம்பி பேங்னான் கோன்யாக். முன்னதாக, கடந்த 1977ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற முதல் பெண் எம்பி என்ற வரலாற்றை ரானோ ஷைசா படைத்திருந்தார்.


மாநிலங்களவை துணை தலைவர் குழுவில் நாகாலாந்து பெண் எம்பி:


நாகாலாந்து திமாபூர் நகரத்தில் பேங்னான் கோன்யாக், தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், டெல்லிக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தௌலத் ராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.


போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார் பேங்னான் கோன்யாக். ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் கழகத்தின் பெண்கள் மேம்பாடு மற்றும் நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.


பேங்னான் கோன்யாக்கை தவிர, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஃபௌசியா கான், நியமன எம்பி பி.டி உஷா மற்றும் பிஜு ஜனதா தளத்தின் சுலதா தியோ ஆகிய பெண் எம்பிக்களும் மாநிலங்களவை துணை தலைவர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள பெண் எம்பிக்கள் அனைவரும், முதல் முறை எம்பிக்கள் ஆவர்.


மாநிலங்களவை துணை தலைவர் குழுவில் மொத்தம் 8 எம்பிக்கள் உள்ளனர். தற்போது 4 பெண் எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் குழுவில் பெண்களின் பலம் உயர்ந்துள்ளது.


மாநிலங்களவை துணை தலைவராக பதவியேற்றதை தொடர்ந்து, பேங்னான் கோன்யாக் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று மாநிலங்களவைக்கு தலைமையேற்றது பெரும் பாக்கியம். உணர்வுகள் நிரம்பி வழிகிறது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (ஐந்தாவது திருத்தம்) மசோதா, 2022, மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இது ஒரு பயனுள்ள ஒன்றாக இருந்ததில் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார்.