மகாராஷ்டிரா மாநிலம் சென்ற பிரதமர் மோடி, இன்று நடந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 15 ஆயிரம் வீடுகளை பயனாளர்களுக்கு திறந்து வைத்தார். பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் மிகப்பெரிய சமுதாயத்தின் திறப்பு விழா நடந்துள்ளது.
கண்கலங்கிய பிரதமர் மோடி:
நான் குழந்தையாக இருந்தபோது இதுபோன்ற ஒரு வீட்டில் வாழ வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். தற்போது, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகியிருப்பதைக் காணும்போது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
அவர்களின் ஆசீர்வாதமே எனக்கு மிகப் பெரிய சொத்து" என்று கண்கலங்கி பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் வறுமை தொடர்ந்து வருகிறது. வறுமை ஒழிய வேண்டும் நீண்ட காலமாக கோஷங்கள் மட்டும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வறுமையை ஒழிக்க என் தலைமையிலான அரசு 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
”வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்"
சமூகத்தின் விளிம்புநிலைகளில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான எனது தலைமையிலான அரசு தொடந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது அரசு ஏழைக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசு என்று கூறியிருந்தேன். எனவே, ஏழைகளில் சிரமங்களை குறைத்து, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் இதுபோன்ற திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தினோம்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மதிக்க கற்றுக்கொடுத்தார் ஜெய் ஸ்ரீராம் . ராமரும் தன் மக்களை மகிழ்விக்கும் வேலையைச் செய்தார்.அதேபோலவே எனது அரசு ஏழை மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.
எனவே, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22ஆம் தேதி அன்று மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள். மக்கள் ஏற்றும் ராமஜோதி விளக்கு அவர்களின் வாழ்வில் இருந்து வறுமையை அகற்ற உத்வேகமாக இருக்கும்” என்றார் பிரதமர் மோடி.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.
இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க