Bilkis Bano : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது.
குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ஜனவரி 8-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டது.
குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வந்தார். கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்றம் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது. "நீதிமன்றங்கள், நீதியை வழங்க வேண்டுமே தவிர, நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது" என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாக ரத்னா, உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளனர்.
மேலும், உச்சநீதிமன்றம் குஜராத் அரசை கடுமையாக சாடியது. குற்றவாளிகளுக்கு அரசு உடந்தையாக இருக்கிறது. அவர்களை விடுதலை செய்த விவகாரத்தில் குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அவர்கள் 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. அதனை தொடர்ந்து வரும் 21 ஆம் தேதிக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என கெடு விதித்தது, ஆனால் இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.