மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது.


தேசத்தின் மனசாட்சியை உலுக்கும் சம்பவம்: நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகே, சில மாநிலங்களில் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.


இந்த நிலையில், கொல்கத்தா மருத்துவர் வழக்கு குறித்து பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது என கூறியுள்ளார். மகாராஷ்டிரா ஜல்கான் நகரில் நடைபெற்ற 'லக்பதி திதி சம்மேளன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, "பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்பதை ஒவ்வொரு மாநில அரசுக்கும் மீண்டும் ஒருமுறை கூறுவேன்.


குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தப்பவிடக் கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டங்களை வலுப்படுத்தி வருகிறோம்" என்றார். 


வழக்கின் பின்னணி என்ன? இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே சம்பவம் நடந்த கல்லூரியின் முதல்வரான சந்தீப் கோஷ் மீது சந்தேக கண்கள் பாய்ந்து வருகின்றன. குறிப்பாக, இந்த சம்பவம் பெரிய பிரச்னையாக வெடித்த உடனேயே தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 


சம்பவம் நடந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தாமதம் செய்தது, கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்களிடம் தவறான தகவல்களை அளித்தது சந்தீப் கோஷ் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது.


வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சந்தீப் கோஷ் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர். பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இரவில் பணியில் இருந்த மற்ற நான்கு மருத்துவர்களுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.