பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


இதையடுத்து, அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது. மாநில அரசுகளும் இதை செயல்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து மாற விருப்பம் தெரிவிப்பவர்களும் விருப்பமிருந்தால் மாறிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பலன்கள் என்னென்ன?


மத்திய அரசு அமல்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.



  • இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.

  • பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக 12 மாதங்களில் பெற்ற ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

  • இந்த 50 சதவீத ஓய்வூதியமானது 25 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களுக்கு கிடைக்கும்.

  • அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு அவர்கள் பணி செய்த ஆண்டுகளுக்கு ஏற்ப ஓய்வூதியம் மாறும்.

  • ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியரின் மறைவுக்கு பின் அவர் பெற்ற பென்சனில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக அவருடைய குடும்பத்திற்கு வழங்கப்படும்.

  • இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் அரசு ஊழியர்களில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

  • ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும்.

  • பணியில் இருந்து ஓய்வு பெறும்போது கிராஜூவிடியுடன் ரொக்கப் பலனும் வழங்கப்படும். ஓய்வின்போது பெற்ற மாத ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10ல் ஒரு பங்கு ரொக்கப் பலனாக வழங்கப்படும். நிறைவு செய்த ஒவ்வொரு ஆறு மாத பணி அடிப்படையில் இது வழங்கப்படும்.


இந்த திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் குறையாது என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.