மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 26 கட்சிகள் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. 


"எதிர்மறையால் கட்டமைக்கப்பட்ட கூட்டணிகள் ஒருபோதும் வென்றதில்லை"


இந்த நிலையில், தங்களின் பலத்தை காட்டும் வகையில் பாஜகவும் தங்களின் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது. இதில், 38 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். எதிர்மறையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணிகள் ஒருபோதும் வென்றதில்லை எனக் கூறிய அவர், "ஒரு கூட்டணி குடும்ப கட்சிகளாலும் ஊழல் கட்சிகளாவும் இருக்கும்போது, ​​நாடு தோல்வி அடைந்துவிடும்" என்றார்.


எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெயரை பயன்படுத்தாமல் விமர்சித்து பேசிய மோடி, "இந்தியாவில் பல அரசியல் கூட்டணி அமைந்துள்ளது. அதற்கு வரலாறு உண்டு. எதிர்மறையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டணியும் தோற்றுப் போய்விட்டது" என்றார்.


"இது நிர்ப்பந்தத்தின் கூட்டணி அல்ல"


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பற்றி பேசுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளை மாற்றுவதற்காக உருவாக்கப்படவில்லை. ஆனால், ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​ஆக்கபூர்வமான அரசியலை உறுதி செய்தோம். 


அரசியலமைப்பை வலுப்படுத்தினோம். நாங்கள் அரசாங்கத்தை விமர்சித்தோம். ஆனால், மக்களின் தீர்ப்பை அவமதிக்கவில்லை. நாங்கள் வெளிநாட்டு நிதியை நாடவில்லை" என்றார்.


என்.டி.ஏவில் உள்ள என் புதிய இந்தியாவையும் டி என்ற எழுத்து வளர்ந்த தேசத்தையும் ஏ என்ற எழுத்து மக்கள் மற்றும் பிராந்தியத்தின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது நிர்ப்பந்தத்தின் கூட்டணி அல்ல மாற்றாக பங்களிப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.


தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது யார், யார் என அனைவரும் தேடி வருவகின்றனர். சுரண்டுலுக்குள்ளானவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஆதிவாசிகள் மற்றும் பின்தங்கியவர்களுக்காக உழைப்பவர்களே எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். எங்கள் கூட்டணி நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 


தேசமே முதலானது. முன்னேற்றமே முதலானது. மக்களுக்கு அதிகாரம் வழங்குவது முதலானது. இதுவே எங்களின் முழக்கம். காந்தி மற்றும் அம்பேத்கர் வகுத்த சமூக நீதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி செய்து வருகிறது. ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்குவோம் என்று உறுதியளிக்கும் போது, ​​வருங்கால சந்ததியினரைப் பாதுகாப்போம்.


தேசிய ஜனநாயக கூட்டணியின் திட்டங்கள் வறுமையின் தீய சுழற்சியை உடைத்துவிட்டன. நான் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்திற்குச் சென்று பழங்குடியினப் பெண்களைச் சந்தித்தேன். சுயஉதவி குழுக்களின் உதவியால் லட்சாதிபதிகளாகி விட்டதாக என்னிடம் சொன்னார்கள்" என்றார்.