மாநில அரசுகளை விலைக்கு வாங்குவது தான் மத்திய அரசின் ஒரே வேலை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளர்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது. அதன்படி கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த மாதம் பீகாரில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'INDIA' (Indian National Democractic Inclusive Alliance) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஆளும் பாஜக அரசை வீழ்த்துவது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என கூறியுள்ளார். மேலும் மத்திய அரசாங்கத்திற்கு ஒரே ஒரு வேலைதான் உள்ளது. அது மாநில அரசுகளை விலைக்கு வாங்குவது” என தேசிய ஜனநாயக கூட்டணியை கிண்டலடித்து பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், NDA கூட்டணியால் 'INDIA'-வுக்கு சவால் விட முடியுமா..?. நாங்கள் எங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம், நாங்கள் தான் தேசபக்தர்கள்’ எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.