அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா விரைந்தார். ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் குழுமியிருந்த பெருந்திரளான வெளிநாடுவாழ் இந்தியர்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



 


முன்னதாக, டெல்லியில் இருந்த தனி விமானத்தில் வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றபோது, தனது நீண்ட விமானப் பயணத்தில் தனது அலுவலகப் பணிகளைக் கவனித்து வருவதாகக் கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இது, பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது.     






நம்மில் பெரும்பாலானோர் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை எள்ளி நகையாடுவது உண்டு. ஆனால், வெளிநாட்டு பயணங்களில்  பிரதமர் மோடி, மற்றவர்களிடத்தில் (Self- Other) தன்னைப் பற்றிய கருத்தாக்கத்தை புதுப்பித்து கொள்கிறார். அமெரிக்காவில் தொழில் அதிபர்களை சந்திக்கும் மோடி, சீனாவில் weibo ஊடக கணக்கைத் தொடங்கும், ஜப்பானில் இசைக்கருவிகள் வாசிக்கும் மோடி, இந்தியாவில் அநேக நேரங்களில் இறுக்கமான மனநிலையில் தான் காட்சியளிக்கிறார்.   


"ஒரு குஜராத்தியாக எனது ரத்தத்தில் வியாபாரம் கலந்துள்ளது" என்று மோடி சொன்னது ஜப்பானில் தான். இந்தியாவில் இதை அவரால் சொல்லியிருக்க முடியுமா?. இந்தியாவில் தான் நினைத்த நேரத்தில் அம்பானி, அதானியை போன்ற தொழிலதிபர்களை   சந்திக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது? மோடி உருவாக்கி வைத்துள்ள காட்சி அரசியல் இதற்கு இடம் கொடுக்குமா? என்பது தான் கேள்வியாக உள்ளது. 


காட்சி அரசியல்: நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் பிம்ப அரசியல் (இமேஜ் பாலிட்டிக்ஸ்) முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையான மோடி யார்? அவரின் அரசியல் நிலைப்பாடு என்ன? வலதுசாரி சிந்தனையில் ரொனால்டு ரேகனா? பொருளாதார சிந்தனையில் மார்கரெட் தட்சரா?  தீவிர இந்துத்துவா சிந்தனையாளரா? ஜனநாயகவாதியா? இடஒதுக்கீடு முறையை ஒழிக்க வந்தவரா?  கோடிக்கணக்கான விளிம்புநிலை மக்கள் வாழ்வில் ஒளியேற்ற வந்தவரா? போன்ற எந்த கேள்விகளுக்குமான பதிலை நம்மால் கண்டறிய முடியாது.        



மோடி தீவிர இந்துத்துவா அரசியலை கொண்டு செல்லவில்லை என்று வலதுசாரிகள் குற்றம் சாட்டி  வருகின்றனர். ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற மரபை அகற்றி 'இந்து தேசியவாத' அடையாளத்தை நிறுவுவதில் பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இந்தியாவின் அரசியல் தலைவர்களில்  தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் கையாண்டதில் மோடி முன்னிலை வகிக்கிறார். 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில்,"ஹோலோக்ராம்” (Hologram) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். இதன் மூலம், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கூட்டங்களை பங்கேற்கக்கூடியதாக (Virtual modi) அவரது பிரசாரம் நடந்தேறியது.


                                                           


குஜராத்தில் ஒரு பிராச்சார மேடையில் பேசும்போது, ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் போலிக் காட்சியாக( Virtual Image) தோன்றினார். இந்த மெய்நிகர் மோடியை நூற்றுக்கணக்கான மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.


 தான் யார்? தனது அரசியல் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகளுக்கு விளக்கமளிக்க மோடிக்கு 10 நிமிடம் கூட ஆகாது. ஆனால், மோடி வெளிப்புற நெருக்கடிகளுக்கு/கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புவதில்லை என்பது ஒரு வாதமாகும். ஆனால், மற்றொரு புறத்தில், இந்த ரகசியம்தான் மோடியின் மீதான ஆர்வத்தை மக்களிடத்தில் அதிகப்படுத்துகிறது. அரசியல் ரீதியாக அமித்ஷா மோடியின் நம்பிக்கையைப் பெற்றிருந்தாலும், மோடியின் மனசாட்சியாக அமித்ஷா பிரதிபலிக்கமுடியாது. தனது  சுயசரிதையை பாதுகாக்கும் உரிமையை தனது இணையாருக்கும், தாயாருக்கும் மோடி வளங்கவில்லை. 


வத்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் கடையில் விற்பனை செய்தேன் என்ற தகவலை அரசியல்படுத்தினாரே தவிர, தனியொரு மனிதனின் வாழ்க்கை அனுபவமாக காட்ட விரும்பவில்லை. தான் கண்டறிந்த புதிய இந்தியாவில், யார் வேண்டுமானாலும் அரசியலை அணுகலாம், அரசியலில் குடும்பம் தேவையில்லாத ஒன்று என்றளவில்தான் மோடி தேநீர் கடை விவகாரத்தை கொண்டுசெல்ல விரும்புகிறார்.           



சுருங்கச் சொன்னால், தன்னை வெகுஜன மக்கள் எப்படி பார்க்கவேண்டும் என்று மோடி விரும்பும் பிம்பத்தைத்தான் நாம் இதுவரை மோடியாக பார்த்துக் கொண்டுவருகிறோம். அதற்கு மேல், மோடியைப் பற்றிய கருத்துக்கள் எல்லாம் நமது இயலாமையில் உதித்த அனுமானங்கள் தான்.     


கொரோனோ பெருந்தொற்று காலத்தில், மோடி தாடியை வளர்க்கத் தொடங்கினார். '56 இஞ்ச் செஸ்ட்' கொண்ட ஆண்மகன் என்ற பிம்பத்தை மாற்றத் தொடங்கினார். இதற்கு, பிம்ப மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன.


நரேந்திர மோடி, "பிம்பம் ஒழிப்பு" (Death of the image) என்ற கோணத்தில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பிரதமர் என்ற பதவியை மோடி பாரம்பரிய இந்து மத கோட்பாட்டின் கீழ்கொண்டு வந்தார். இந்து சமயத்தில், மன்னன் என்பவர் இயல்பு வாழ்கையை  துறந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டனர். மனித வாழ்வில் நான்காம் ஆசிரம நிலையான சந்நியாசம் அல்லது துறவறமே மிகவும் புனிதம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்காலிக, இந்திய அரசியலிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில், ஜனாபதியாக வேண்டும் என்றால், தான் நல்ல குடும்பஸ்தன் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் திருமணமாகாத, மிகச்சிறந்த தலைமைப் பண்பாக கருதப்படுகிறது. காமராஜர், ஜெயலலிதா, வாஜ்பாய், மம்தா பேனர்ஜி, நரேந்திர மோடி ஆகியோரும் இந்த பட்டியலில் அடங்குவர்.               


இரண்டாவதாக, காலத்தில் மோடி, தன்னோட வலியை காட்டுறதுக்காகத் தான் தாடி வளர்த்தார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மூன்றாவதாக, மேற்கு வங்கத் தேர்தல் காரணமாக  ரவீந்திரநாத தாகூர்போல் மோடி தாடி வளர்த்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. 


இதில், எது உண்மை? என்பதை யாராலும் கூற முடியாது. ஏனெனில், சுருங்கச் சொன்னால், தன்னை வெகுஜன மக்கள் எப்படி பார்க்கவேண்டும் என்று மோடி விரும்பும் பிம்பத்தைத்தான் நாம் இதுவரை மோடியாக பார்த்துக் கொண்டுவருகிறோம். அதற்கு மேல், மோடியைப் பற்றிய கருத்துக்கள் எல்லாம் நமது இயலாமையில் உதித்த அனுமானங்கள் தான். 


நரேந்திர மோடியை கோத்ரா ரயில் கலகக்காரராக காங்கிரஸ் கட்சி காட்சிப்படுத்த விரும்புகிறது, அயோத்தியத்திக்கு வருகைத் தந்த ராமனாக பாஜக காட்சிப்படுத்த விரும்புகிறது. ஆனால், இந்த முயற்சிகள் நரேந்திர மோடி என்ற தனிமனிதனுக்குப் பின் உள்ள கருத்தாக்கத்தை கேள்வி கேட்காது, புரிந்து கொள்ளாது. மோடியும் அதனை விரும்பவில்லை.