புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கும், சட்டபேரவைக்கும் எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அழகாய் அமைந்துள்ளது ஆயி மண்டபம். இந்த ஆயி மண்டபம்தான் புதுச்சேரி அரசு சின்னம். இந்த மண்டபத்தின் பெயருடைய ஆயி என்பவர் தேவதாசி பெண். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். விஜயநகர பேரசின் மன்னராக இருந்த கிருஷ்ணதேவராயர் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரைப் பார்க்க வந்தார். அப்போது புதுச்சேரி முத்தரையர் பாளையத்தில் இருந்த மாளிகையைக் கோயில் என நினைத்து வணங்கினார். ஆனால், அருகில் இருந்தோர் இது தாசியின் வீடு என்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மன்னர் அந்த மாளிகையை இடிக்க மன்னர் உத்தரவிட்டார். தான் ஆசையாகக் கட்டிய மாளிகையை தானே இடிப்பதாகவும், அதற்குக் கால அவகாசம் வேண்டுமென்றும் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் தேவதாசி ஆயி கோரிக்கை விடுத்தார். தேவதாசி ஆயியின் கோரிக்கையை மன்னர் ஏற்றுக்கொண்ட நிலையில், மாளிகையை ஆயி இடித்ததுடன், அந்த இடத்தில் தனது செல்வத்தைக் கொண்டு மக்களுக்காக குளத்தை ஆயி உருவாக்கினார். இந்தக் குளம் புதுவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக அமைந்தது. அதன் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அப்போது தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க அப்போதைய ஆளுநர் போன்டெம்ப்ஸ், பிரான்சில் ஆட்சி செய்த அரசருக்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே புதுச்சேரி வந்தார்.
16 ஆம் நூற்றாண்டில் ஆயி வெட்டிய முத்தரையர் பாளையத்திலுள்ள இக்குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். அதன் மூலம் புதுவை நகருக்குத் தண்ணீர் வந்தது. புதுவை தண்ணீர் பிரச்சினை தீர்ந்தது தொடர்பாகவும், பொறியாளரை கவுரவிக்க அனுமதி கேட்டும் ஆளுநர், மூன்றாம் நெப்போலியனுக்குக் கடிதம் எழுதினார். தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை மன்னர் உத்தரவில் இடித்துவிட்டு மக்களுக்காக தனது இடத்தில் குளத்தினை வெட்டிய ஆயியின் சிறப்பை வியந்த மூன்றாம் நெப்போலியன் தேவதாசி ஆயியின் சேவையை போற்றும் வகையில் ஒரு மண்டபம் அமைக்க உத்தரவிட்டார்.
கிரேக்க ரோமானியக் கட்டிடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தைச் சுற்றி பாரதி பூங்கா அமைந்தது. இந்தோ பிரெஞ்சு உறவின் ஒரு முதன்மையான அடையாளமாகத் திகழும் இக்கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது ஆயிக்குப் புதிதாக சிலையும் மண்டபத்தில் வைத்துள்ளனர். அருகே ஆயி அம்மையார் எனப் பெயர் பலகையையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.