கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதாக எந்த வித ஆதாரமும் இன்றி மனைவி குற்றம்சாட்டினால் அது மன ரீதியான துன்புறுத்தலுக்கு சமம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், விவாகரத்துக் கோரி கணவர் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
விவகாரத்துக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தார்வாத் குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தார்வாத்தை சேர்ந்த நபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுனில் தத் தலைமையிலான அமர்வு, இந்த கருத்து தெரிவித்துள்ளது.
மனைவிக்கு மறுமணம் நடைபெறும் வரை, அவருக்கு 8,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்த நீதிமன்றம், "தனது கணவர் திருமண கடமைகளை நிறைவேற்றவில்லை. பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட அவரால் இயலவில்லை என்றும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கணவரின் கண்ணியத்தைக் குறைக்கும். ஒரு கற்றறிந்த பெண் தன் கணவனின் இயலாமையை பிறர் முன்னிலையில் கூறமாட்டார். கணவரின் குழந்தைகளைப் பெற இயலாமை தொடர்பான குற்றச்சாட்டு மனரீதியான துன்புறுத்தலுக்கு சமம்.
மருத்துவ பரிசோதனைக்கு தயார் என கணவர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், மனைவி மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தன் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டார். இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 13 இன் படி, ஆண்மையின்மை விவகாரத்திற்கு காரணமாக இருக்க முடியாது. இது தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறது. இந்த பின்னணியில் கணவர் விவாகரத்து கோரலாம்" என தெரிவித்தது.
மனுதாரர் அந்த பெண்ணை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் அவர் விவாகரத்து கோரி தார்வாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தொடக்கத்தில் தனது மனைவி திருமண வாழ்க்கைக்கு ஒத்துழைத்ததாகவும் ஆனால் பின்னர் அவரது நடத்தையில் மாறுதல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தன்னால் உடலுறவு கொள்ள இயலாது என மனைவி உறவினர்களிடம் பலமுறை கூறியதாகவும், இதன் காரணமாக தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் மனைவியிடம் விவகாரத்து கோரினார். இருப்பினும், தார்வாத் குடும்ப நல நீதிமன்றம் ஜூன் 17, 2015 அன்று விவாகரத்து கோரிய அவரது மனுவை நிராகரித்தது. பின்னர், கணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.