நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில்  3 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி கிடைத்ததற்காக பிரதமர் மோடியை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பாராட்டினர். 


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் முக்கிய கூட்டத்தொடர்களில் ஒன்று என்பதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வழக்கம்போல எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்பி வரும் நிலையில், பாஜகவும் பலவித திட்டங்களை வகுத்துள்ளது.


இதனிடையே மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய பாஜகவின் நாடாளுமன்ற கூட்டம், பொதுவாக நாடாளுமன்றம் கூடும் போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜகவின் முக்கிய தலைவர்கள் கூட்டத்தொடர் தொடர்பான முக்கிய நடவடிக்கைகள், கட்சி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகள் குறித்து விவாதிப்பது வழக்கம்.  அந்த வகையில் பாஜக கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. 






சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதில் 2 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் பாஜக கைப்பற்றியது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு கிடைத்த இந்த வெற்றி அக்கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. 


இப்படியான நிலையில் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கரகோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டினார்.நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவேற்பை முழுமையாக ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் வணக்கம் செலுத்தினார்.