எம்.எஸ். தோனியின் மீதுள்ள காதலால் அவரது ரசிகர் ஒருவர் கணிதத் தேர்வின்போது தனது விடைத்தாளில் ஒவ்வொரு கேள்விக்கும் ‘தல’ என்று பதில் எழுதியதால் டெல்லி சிறுவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பெருமைப்படுத்த வேண்டும் என்று என்ணிய கஜோதர் என்ற சிறுவன் ஒரு திட்டத்தை யோசித்துள்ளார். அதன்படி, தான் எழுதிய கணிதத் தேர்வில் அனைத்து  கேள்விகளுக்கும் ’தல’ என்று பதில் எழுதியுள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 


தல, தலை அல்லது தலைவர் என்ற வார்த்தைகள் தமிழ் சொல்லாகும். இந்த வார்த்தை தமிழ்நாட்டு மக்களால் தாங்கள் போற்றும் அல்லது மதிக்கக்கூடிய ஒருவரை செல்லமாக அழைப்பர். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது எம்.எஸ்.தோனிக்கு, தமிழ்நாடு மக்கள் ’தல’ என்ற இந்த பெயரை சூட்டி அழகு பார்த்தனர். 


இதுகுறித்து பள்ளி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “எந்தவொரு புகழ்பெற்ற ஆளுமையின் ரசிகராக இருப்பதில் தவறில்லை. ஆனால், கஜோதர் செய்தது முற்றிலும் தவறான செயல். மாணவர் தனது தேர்வை சீரியஸாக எடுத்திருக்க வேண்டும். இப்போது, தேர்வில் ’தல’ என்று எழுதி தோல்வியடைந்தது மட்டுமல்ல, இடைநீக்கம் செய்யப்பட்டார்” என்று தெரிவித்தார். 


பொறுப்பும் வேண்டும்..


உங்களுக்கு ஒருவர் மீது அதீத காதலும், மரியாதையும் இருந்தால் அவர் செய்த நல்லதை மட்டுமே எடுத்துகொண்டு அவரை பின்பற்றி நாமும் வாழ்வில் முன்னேற வேண்டும். அவரை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி தேர்வில் கூட அவரது பெயரை பதிலாக எழுதினால், அவர் வந்து உங்கள் வாழ்வின் கடைசி வரை தனது ரசிகர் என்று சோறு போடமாட்டார். நாம் படித்தால்தான் நமக்கு சோறு, நாம் படித்தால்தான் நமக்கு உயர்வு. எனவே, இன்றைய கால மாணவர்கள் படிப்பை விளையாட்டாகவும், விளையாட்டை சீரியஸாகவும் எடுத்துகொண்டு வாழ்க்கையை இழக்கிறார்கள். தயவுசெய்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று ஆராயுங்கள்.


தோனிக்கு சென்னை மக்கள் கொடுத்த அன்பான பெயர் ‘தல’:


மகேந்திர சிங் தோனிக்கும் சென்னைக்கும், சென்னை மக்களுக்கும் எப்போதும் ஒரு சூப்பரான காதல் பந்தம் இருந்து வருகிறது.  சென்னை ஆடுகளம் எப்போதும் தோனிக்கு ராசியான ஒன்றாகவும், சென்னை மக்கள் தோனிக்கு அளவு கடந்த அன்பையும் கொடுத்து வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடி வருகிறார். இவருக்கு சென்னையில் எப்போதும் உற்சாக வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த 2023 ஐபிஎல் சீசனிலும் தோனி ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும்போது மக்கள் செய்த ஆரவாரம் இன்றளவும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. 


இந்தச் சூழலில் தோனிக்கு சென்னையை மிகவும் பிடிக்க காரணம் என்ன?


சென்னை வரும்போது எல்லாம் தோனி ஒரு பைக் எடுத்து கொண்டு சென்னை சுற்றி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையிலுள்ள பல்வேறு இடங்களுக்கு பைக் மூலம் சுற்றி பார்த்துள்ளதாக தெரிகிறது. சென்னை வரும் தோனி தனக்கு விருப்பமான உணவான தோசையை அதிகளவில் விரும்பி சாப்பிடுவார் என்றும், சென்னை தனது இரண்டாவது தாய் வீடு என்றும் அடிக்கடி கூறுவார். இப்படியான சூழலில், சென்னை மீது மிகுந்த காதல் ஏற்பட்டு, நாளடைவில் சென்னை மிகவும் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து, தோனிக்கு ’தல’ என்று செல்லப்பெயர் வைத்து அழகு பார்த்தனர் சென்னை மக்கள்.


கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி இரட்டை சதம் விளாசி அசத்தினார். அதுவும் அவருக்கு சென்னையில் தான் நடந்தது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானம் அவருக்கு ஒரு உள்ளூர் ஆடுகளம் போல் மாறியது. சென்னைக்கு எப்போதும் எல்லாம் தோனி வருகிறாரோ அப்போது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய திருவிழாதான்.