சனாதன தர்மம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி விமர்சித்தது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், உதயநிதிக்கு தக்க பதிலடி தரும்படி பிரதமர் மோடி அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. சனாதனம், இந்தியா பெயர் மாற்றம் தொடர்பாக இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார்.

"வரலாற்றுக்குள் செல்ல வேண்டாம். ஆனால் அரசியலமைப்பில் உள்ள உண்மை தகவல்களை மட்டும் பேசுங்கள். மேலும், இப்பிரச்சினையின் தற்கால நிலை குறித்தும் பேசுங்கள்" என பிரதமர் மோடி அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

Continues below advertisement

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது என்ன?

சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. 

இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சனாதன விவகாரத்தால் I.N.D.I.A கூட்டணியில் சலசலப்பு:

உதயநிதியின் பேச்சு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு “கண்டனம் என்று சொல்வதற்குப் பதிலாக, பெரிய அல்லது சிறிய பகுதி மக்களை புண்படுத்தும் விதமான கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று அனைவரையும்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

சனாதனத்தை நான் மதிக்கிறேன். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை' என்பது தான் நமது இந்தியாவின் பூர்வீகம். எந்த ஒரு பிரிவினரையும் புண்படுத்தும் எந்த விஷயத்திலும் நாம் ஈடுபடக்கூடாது” என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

பாஜக காட்டமான விமர்சனம்:

உதயநிதியை ஹிட்லருடன் ஒப்பிட்ட பாஜக நேற்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்தது. இதுகுறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு, "ஹிட்லர் யூதர்களை எப்படிக் குறிப்பிட்டார் என்பதற்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை விவரித்ததற்கும் இடையே ஒரு வினோதமான ஒற்றுமை உள்ளது.

ஹிட்லரைப் போலவே உதயநிதி ஸ்டாலினும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். நாஜி வெறுப்பு எப்படி ஹோலோகாஸ்டுக்கு (இனப்படுகொலைக்கு) இட்டு சென்று, சுமார் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களையும், குறைந்தது 5 மில்லியன் சோவியத் போர்க் கைதிகளையும் பிற பாதிக்கப்பட்டவர்களைக் கொன்றது என்பதை நாங்கள் அறிவோம்.

உதயநிதி ஸ்டாலினின் கருத்து அப்பட்டமான வெறுப்பு பேச்சு.  சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பித்தத்திற்கு காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது அதிருப்தி அளிக்கிறது" என பதிவிடப்பட்டுள்ளது.