சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். எந்த ஒரு காரணமும் இன்றி ஒருவர் மீது ஏற்படும் உணர்வு. அதனால் தான், அனைத்தையும் கடந்து ஒருவரை நேசிக்கிறோம். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் ஒரு இயல்பான நிகழ்வே.


ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.


சட்ட அங்கீகாரம் பெற்ற நாடுகள்:


அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் , ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.


இந்த நிலையில், இதேபோன்று, ஹாங்காங்கில் தன்பாலின தம்பதிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அங்கீகாரம் வழங்குதவற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பான சட்டம் இயற்ற அந்நாட்டு அரசுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. 


தன்பாலின தம்பதிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய ஹாங்காங்:


ஆனால், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு திருமணத்தின் முழு உரிமைகளை வழங்குவதற்கு மறுத்துவிட்டது. சிறையில் உள்ள ஜனநாயக ஆதரவு ஆர்வலர் ஜிம்மி ஷேம் என்பவர்தான் இந்த வழக்கை, தொடர்ந்துள்ளார். ஹாங்காங் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, தன்பாலின திருமண விவகாரத்தை நேரடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


"தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதற்காக ஒரு மாற்று கட்டமைப்பை நிறுவுவதற்கான அதன் கடமையை ஹாங்காங் அரசு மீறியுள்ளது" என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், முழு திருமண உரிமைகளை வழங்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், "ஹாங்காங்கின் அடிப்படைச் சட்டத்தின் கீழ், திருமணத்திற்கான அரசியலமைப்புச் சுதந்திரம் எதிர் பாலினத் திருமணத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், "பகுதியளவு வெற்றி தன் பாலின ஜோடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பிற்கு வழி வகுக்கும். ஆனால், சீன கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கின் சட்டமன்றத்தில் இருந்து என்ன மாதிரியான அங்கீகாரம் வழங்கப்படும்  என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றனர்.