நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை  200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் 


இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் களத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இதில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக மக்களை கவரும் வகையில் பல திட்டங்களை கையில் எடுத்து வருகிறது. அதேசமயம் கடந்த  ஆண்டுகளில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கிய நிகழ்வுகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. 


அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக, நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை  200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த விலை குறைப்பானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. 


அதேசமயம்  உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ.200 குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது  மேலும், 200 ரூபாய் குறையும் எனவும் அனுராக் தாக்கூர் கூறினார். இது பாஜகவின் கண் துடைப்பு முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் ரூ.800 வரை விலை ஏற்றிவிட்டு ரூ.200 குறைத்தால் நியாயமா என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 


சிலிண்டர் விலை குறைப்பு


பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்   எண்ணெய் நிறுவனங்களால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட்1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை  ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852 ஆக விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.  தமிழகத்தை பொறுத்தவரை வீட்டு உபயோக சிலிண்டர் விலை நேற்று வரை ரூ.1,118க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,  இந்த விலையில் இருந்து ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததால் இன்று முதல் ரூ. 918 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 


பிரதமர் மோடி ட்வீட் 


இந்நிலையில் பிரதமர்  மோடி சிலிண்டர் விலை குறைப்பு குறித்து ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரக்‌ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். அதேபோல் எரிவாயு விலை குறைப்பு எனது  குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இதுவே கடவுளின் என் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.