LPG Cylinder Price: நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை  200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

சிலிண்டர் விலை குறைப்பு:

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 1ஆம் தேதி வணிக கேஸ் சிலிண்டர் விலை  ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852 ஆக விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலை தமிழகத்தில் ரூ.1,118க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,  இந்த விலையில் இருந்து ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விறை குறைப்பானது நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உஜ்வாலா திட்டத்தில் தற்போது 9.6 கோடி பயனாளிகள் உள்ளனர். கூடுதலாக 75 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ.200 குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது  மேலும், 200 ரூபாய் குறையும். அதாவது, கூடுதலாக 200 ரூபாய் மானியம் வழங்கப்படுவதால் தற்போது அவர்கள் வாங்கும் சிலிண்டரின் விலையில் 400 ரூபாய் குறையும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்நிலையில், மாநில வாரியாக எவ்வளவு ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படுவது என்பதை பார்ப்போம். 

மாநில வாரியாக எவ்வளவு?

 

 
மாநிலங்கள் விலை நிலவரம் (14 கிலோ எடை கொண்ட சிலிண்டர்)
டெல்லி 903 ரூபாய்
மும்பை 902.05 ரூபாய் 
கொல்கத்தா 929 ரூபாய்
சென்னை 908.5 ரூபாய்
பெங்களூரு 905.5 ரூபாய்
அகமதாபாத் 910 ரூபாய்
ஹைதராபாத் 955 ரூபாய்
பாட்னா 1,001 ரூபாய்
போபால் 908.5 ரூபாய்
ஜெய்பூர் 906.5 ரூபாய்
லக்னோ 940.5 ரூபாய்

இந்த விலையின் அடிப்படையில் நாளை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாக உள்ளது.  இந்த மாத துவக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. தக்காளி, வெங்காயம் போன்றவைகளின் விலை உயர்வு காரணமாக ஜூலை மாத பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.  பணவீக்கத்தை சற்றுகுறைக்கும் முயற்சியாகவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.