உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை ஒரு வழக்கறிஞர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் கோபமடைந்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொறுமையைப் பாராட்டிய பிரதமர்:
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை காலணியை வைத்து தாக்க முயற்சி செய்தார், பிரதமர் நரேந்திர மோடி தலைமை நீதிபதியுடன் தொடர்பு கொண்டு இந்தத் தாக்குதலைக் கண்டித்தார்.
"இன்று காலை உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஒவ்வொரு இந்தியரும் கோபமடைந்துள்ளனர். இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது"
"இதுபோன்ற சூழ்நிலையில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் காட்டிய பொறுமையை நான் பாராட்டுகிறேன். இது நீதியின் மதிப்புகள் மீதான அவரது அர்ப்பணிப்பையும், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஒரு வழக்கின் வழக்கறிஞரின் குறிப்பைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ஒரு வழக்கறிஞர் கோபமடைந்தார். "சனாதன தர்மத்தை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூட அவர் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருந்து விசாரணையைத் தொடர்ந்தார்.
இந்த அமளியைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி, "இதுபோன்ற நடவடிக்கைகளால் நாங்கள் பாதிக்கப்படுவதில்லை, விசாரணை தொடரும். நீதிமன்றப் பணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது" என்றார். இடையூறு ஏற்படுத்திய வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள டிசிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி உச்ச நீதிமன்ற அதிகாரிகள், பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் பொறுப்பாளருடன் பேசினார்.
இந்த சம்பவத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. "ஒரு வழக்கறிஞர் தனது தகாத மற்றும் கட்டுக்கடங்காத நடத்தையால், இந்திய தலைமை நீதிபதி மற்றும் அவரது சக நீதிபதிகளின் பதவி மற்றும் அதிகாரத்தை அவமதிக்க முயன்றதற்கு நாங்கள் ஒருமனதாக எங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறோம்" என்று சங்கம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சொன்னது என்ன?
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கை ஒன்றை விசாரித்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதாரங்களின்படி, வழக்கறிஞர் மேடைக்கு அருகில் சென்று தனது காலணியை கழற்றி நீதிபதி மீது வீச முயன்றார். இருப்பினும், நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சரியான நேரத்தில் தலையிட்டு வழக்கறிஞரை வெளியே அழைத்துச் சென்றதால் மோசமான சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. அப்போது தலைமை நீதிபதி எந்தத் தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், "இதற்கெல்லாம் கவனம் சிதறாதீர்கள். நாங்கள் கவனம் சிதறவில்லை. இவை என்னைப் பாதிக்காது" என்று பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.