நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து, இந்தியா சரித்திர சாதனையைப் படைத்துள்ள நிலையில், சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வரலாற்று சாதனை படைத்த இந்தியா
இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற்றது. நான்கு என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறக்குவதற்காக கடைசி 30 கிமீ தொலைவில் இரண்டு என்ஜின்களை துண்டித்தது.
இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து காணொளி வாயிலாக இஸ்ரோ நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
''இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி; நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் எங்களின் அடுத்த கட்டத் திட்டம். இஸ்ரோ மாபெரும் சாதனை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம், விண்ணுக்கு விரைவில் அனுப்பப்படும்.
சந்திரயான் திட்டமானது சந்திரனின் சுற்றுப் பாதைக்கு அப்பால் இந்தியாவின் பயணத்தை செலுத்தும். ஏற்கெனவே சூரியனும் வெள்ளியும் இஸ்ரோவின் திட்டமாக இருந்தது. நம்முடைய சோலார் அமைப்பின் கட்டுப்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளோம்.
மனிதர்களுக்கான பிரபஞ்சத்தின் முடிவில்லாத வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற என்ற எங்களின் அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.
நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறை, உலக அளவில் வரவேற்கப்படுகிறது. சந்திரனுக்கான நமது திட்டமும் அதே மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த வெற்றி மனிதகுலம் அனைவருக்கும் சொந்தமானது.''
இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதம் பொங்கத் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Chandrayaan EXCLUSIVE: சந்திரயான் 3 தரையிறக்கம்; பரபர 17 நிமிடங்கள் எப்படி இருக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பிரத்யேகப் பேட்டி!