வரும் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை சமூக ஊடக கணக்குகளில் மூவர்ண தேசியக் கொடியை தங்கள் ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமையன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது 'மன் கி பாத்' உரையில், 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) என்ற இயக்கத்தை அவர் தொடங்கிவைத்துள்ளார். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுப்போம் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த இயக்கமானது 'ஆசாதி கா அம்ரித் மஹோத்ச'வின் ஒரு பகுதியாகும். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இது மக்களின் இயக்கமாக மாறுகிறது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இயக்கத்தை தொடங்குவதற்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் என விளக்கிய மோடி, "நமது தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
1921ஆம் ஆண்டு, தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்ட கொடியை அண்ணல் காந்தியிடம் வெங்கய்யா வழங்கினார். உண்மையில், இறுதியில் தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்ட கொடியிலிருந்து இது சற்று வித்தியாசமானது. ஆனால் அது ஒரு முன்மாதிரியாக அமைந்தது. அவர் வடிவமைத்த கொடி இன்று நம்மிடம் இருக்கும் மூன்று வண்ணங்களைக் கொண்டிருந்தது. ஆனால் மையத்தில் சுயசார்பின் சின்னமான சுழலும் சக்கரம் இருந்தது.
தேசியக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் பிகைஜி ருஸ்தோம் காமா என்ற மேடம் காமா என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 1907 ஆம் ஆண்டின் அவரது பதிப்பில் மூன்று வண்ணங்களும் இருந்தன. பல கலாசார மற்றும் மத சின்னங்கள் தவிர, மையத்தில் 'வந்தே மாதரம்' என வடிவமைக்கப்பட்டிருந்தது.
'ஹர் கர் திரங்கா' பிரசாரத்திற்காக, மத்திய அரசு கொடி குறியீட்டையும் மாற்றி அமைத்துள்ளது. இப்போது, பாலியஸ்டர், பருத்தி, கம்பளி, பட்டு மற்றும் காதி பந்தல் என அனைத்து வகையான பொருள்களை கொண்டும் கொடியை தயாரிக்கலாம். முன்பு இயந்திரம் மற்றும் பாலியஸ்டர் கொடிகள் அனுமதிக்கப்படவில்லை. கொடியின் அளவு மற்றும் அதன் காட்சி நேரம் ஆகியவற்றில் எந்த தடையும் இல்லை. முன்னதாக, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே கொடியை பறக்கவிட அனுமதி இருந்தது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, மூன்று நாட்களுக்கு 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் வீடுகளின் மேல் ஏற்றப்படவுள்ளது.
சுதந்திரத்தை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் முக்கியமாக கவனம் செலுத்திய பிரதமர் மோடி, "நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, நாம் அனைவரும் ஒரு புகழ்பெற்ற வரலாற்று தருணத்தைக் காணப் போகிறோம்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்