இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போதிலிருந்து 9 ஆண்டுகளாக கே.சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது.


தெலங்கானாவை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்:


தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைக்காத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. அதேபோல, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்.


இந்தாண்டின் இறுதியில், அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து 3 மாதங்களில் மக்களவை தேர்தலும் நடைபெறுகிறது. கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரவாக வேலை பார்த்து வருகிறது.


ஏற்கனவே, அங்கு அரசியல் களம் சூடி பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர், காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்தனர். அதேபோல, பாஜகவுடன் கே.சி.ஆர். நெருக்கம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


பாட்டி தொகுதியை குறிவைக்கும் பிரியங்கா காந்தி:


இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, தெலங்கானாவில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட மேடக் தொகுதியை பிரியங்கா காந்தி குறி வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எமர்ஜென்சி முடிந்து நடத்தப்பட்ட தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டுதான் இந்திரா காந்தி வெற்றிபெற்றார். 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்டவரை தோற்கடித்தார்.


சமீபத்தில், கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, தென் மாநிலங்களில் அதிக தொகுதிளில் வெல்ல பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக, தென் மாநிலங்களில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பிரதமர் மோடியை களமிறக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது.


தென் மாநிலங்களில் உள்ள ஒரு தொகுதியில் மோடியை களமிறக்கினால், அது மற்ற பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தும் என ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஆலோசித்துள்ளனர். அப்படி, பிரதமர் மோடி தெலங்கானாவில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்தால், அவரது முதன்மை விருப்பம் செகந்திராபாத்தாக இருக்கும் என கூறப்படுகிறது.


தற்போது, ​​மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான ஜி கிஷன் ரெட்டி, செகந்திராபாத் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். எனவே, இதற்கு பதிலடியாக, பிரியங்கா காந்தியை தெலங்கானாவின் மேடக் தொகுதியில் களமிறக்க அம்மாநிலதத்தின் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் ராமேஷ்வரம் தொகுதியில் மோடி போட்டியிட உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.